Published : 07 Feb 2024 06:15 AM
Last Updated : 07 Feb 2024 06:15 AM

மத்திய பட்ஜெட்டில் ஐசிஎஃப்-க்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு

சென்னை: மத்திய பட்ஜெட்டில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் இதரப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2024–25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி இதுவாகும். இந்த நிதி மொத்தமுள்ள 17 மண்டலங்கள், 3 ரயில்வே தொழிற்சாலைகள் வாரியாக பிரித்து ஒதுக்கி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில், தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், புதிய பாதைகளுக்கு ரூ.976 கோடியும், அகலப்பாதை திட்டங்களுக்கு ரூ.413 கோடியும், இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ.2,214 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, உலகப் புகழ் பெற்றரயில் பெட்டி தொழிற்சாலையாக விளங்கும் சென்னை ஐசிஎஃப்தொழிற்சாலைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.13,872 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இங்கு காலத்துக்கு ஏற்ப நவீன ரயில் பெட்டிகள், சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ ரயில் பெட்டி உள்ளிட்ட 75 வகைகளில், நூற்றுக்கணக்கான வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

சமீப காலமாக, இங்கு தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்தகட்டமாக, தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் தூங்கும் வசதி ரயில்கள், வந்தே மெட்ரோ ரயில்கள் இந்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இந்த பட்ஜெட்டில், சென்னை ஐசிஎஃப்க்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், வழக்கமான எல்.எச்.பி. பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பெட்டிகளை தயாரிக்க ரூ.13,650 கோடி பயன்படுத்தப்பட உள்ளது.

இதுதவிர, மற்ற நிதியை ஐசிஎஃப் வளாகம், குடியிருப்பு வளாகம் போன்றவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படும். தொழிலாளர் நலன், கணினிமயமாக்குதல் ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு புதிய கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டதால், ரூ.15,428 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x