Last Updated : 05 Feb, 2024 04:36 PM

 

Published : 05 Feb 2024 04:36 PM
Last Updated : 05 Feb 2024 04:36 PM

வான்வழியே தொலைநோக்கும் டிரோன்கள் - நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளில் கலக்கும் கோவை நிறுவனம்

ஒடிசா மாநிலத்தில் மிகவும் பிரபலமான லிப்ட் மூலம் நீர்ப்பாசனம் மேற்கொள்ள உதவும் ‘லோவர் சக்டெல்’ பாசன திட்டத்துக்காக மேப்பிங் பணியில் ஈடுபட்ட ‘பேர்டுஸ்கே ல் டிரோன்’ நிறுவன ஊழியர்கள் .

கோவை: வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளில் நாடு முழுவதும் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது கோவையை சேர்ந்த ‘பேர்டுஸ்கேல் டிரோன்’ நிறுவனம்.

தொழில் நகரான கோவையை மையமாக கொண்ட இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசுத் திட்டங்களில் வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. உரிய அனுமதி பெற்று செயல்படும் இந்நிறுவனம் அனல் மின்நிலையம், காற்றாலைகள், சூரியஒளி ஆற்றல் மின்உற்பத்தி திட்டங்களின் செயல்பாடுகளை கண்டறிதல், தொழில்துறை சார்ந்த சொத்துகளை வான்வழி ஆய்வு செய்தல், கட்டுமானப் பணிகளின் நிலையை துல்லியமாக கண்டறிதல், வேளாண் துறை மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிலங்களை சிறப்பான முறையில் சர்வே செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

தகவல் தொழில்நுட்ப உயர்கோபுரங்களில் ஆய்வு செய்யவும் இவை பெரிதும் உதவுகின்றன. அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள டிரோன்கள் இத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கோவை ‘பேர்ட்ஸ்கேல் டிரோன்’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் விஜய் ஆனந்த், ஹரி, வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது: கோவை அவிநாசி சாலை, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகம் அருகே அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். டிரோன் தொழில்நுட்பம் பயன்பாடு வந்த பின் பல்வேறு துறைகளில் நடவடிக்கைகள் எளிமையாகியுள்ளன.

உதாரணமாக செயற்கைக்கோள் மூலம் நிலத்தை ஆய்வு செய்யும்போது 2 முதல் 3 மீட்டர் அளவில் துல்லியமாக தகவல்கள் சேகரிக்கப்படும். ஆனால் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பயன்படுத்தப்படும் டிரோன் மூலம் 2 செ.மீ அளவு வரை துல்லியமாக தகவல்களை சேகரிக்க முடியும். இதனால் உலகம் முழுவதும் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு தேவையான தகவல் தரவுகளை பெற்று தருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அவிநாசி -அத்திக்கடவு நீர் திட்டத்துக்கு குழாய் அமைக்க தேவையான ‘மேப்பிங்’ நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். 2020-ல் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியின்போது 12 ஆயிரம் ஏக்கரை மேப்பிங் செய்யும் பணிகளை 12 நாட்களில் முடித்து கொடுத்தோம்.

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் - வேதிட்டப் பணிகளுக்காக
‘பேர்டுஸ்கேல்டிரோன்’ நிறுவனம் வழங்கிய மேப்பிங்.

அதேபோல் ஒடிசா மாநிலத்தில் மிகவும் பிரபலமான லிப்ட் மூலம் நீர்ப்பாசனம் மேற்கொள்ள உதவும் ‘லோவர் சக்டெல்’ பாசன திட்டத்துக்கு தேவையான மேப்பிங் செய்து கொடுத்துள்ளோம். மரங்களை அதிகம் வெட்டாமல் செயல்படுத்தப்பட உள்ள கொன்கன் எக்ஸ்பிரஸ்-வே திட்டத்துக்கும், சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்-வே திட்டத்துக்கும் மேப்பிங் செய்து தரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவிகள், நிலத்தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரிதும் உதவுகின்றன. அதேபோல் வேளாண் துறையில் பயிர்களில் நோய் பாதிப்பை முன்னரே கண்டறிந்து, அதன் மூலம் நோய் அதிகம் பரவாமல் குறிப்பிட்ட சில பாதிப்பு பகுதிகளில் மட்டும் மருந்து தெளிக்க தேவையான தகவல்களை வழங்கி வருகிறோம். எதிர்வரும் நாட்களில் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x