Published : 04 Feb 2024 04:08 AM
Last Updated : 04 Feb 2024 04:08 AM

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. சார்பில் 20 புதிய வகை பயிர் ரகங்கள் அறிமுகம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், 20 புதிய பயிர் ரகங்களை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வெ.கீதா லட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு பயிர்களில் 905 ரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. நடப்பாண்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளடக்கிய சுமார் 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வேளாண் பயிர்களில் நெல் கோஆர்எச் 5, நெல் கோ58, மக்காச் சோளம் விஜிஐ எச் ( எம் ) 2, இனிப்பு சோளம் கோ ( எஸ்எஸ் ) 33, சோளம் கோ34, தினை ஏடிஎல் 2, பாசிப் பயிறு விபிஎன் 7, நிலக்கடலை கோ 8, பருத்தி விபிடி 2, தக்கைப் பூண்டு டிஆர்ஒய்1, திராட்சை ஜிஆர்எஎஸ் ( எம்எச் ) 1 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் நெல் கோஆர்எச் 5 120 - 125 நாட்கள் வயதுடையது. இது இரு வழி வீரிய ஒட்டு ரகமாகும். பின் சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கு ஏற்றது. ஹெக்டேருக்கு 6,467 கிலோ மகசூல் கிடைக்கும். வீரிய ஒட்டு விதை உற்பத்தி மிகவும் எளியது. நெல் கோ 58 பின் சம்பா, தாளடி பருவத்துக்கு ஏற்றது. பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகமாகும். ஹெக்டேருக்கு 5,858 கிலோ மகசூல் கிடைக்கும். மக்காச்சோளம் விஜிஐ எச் ( எம் ) 2 மானாவாரியில் ஹெக்டேருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும். பசுமை மாறா தன்மை, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற தானியம் உடையது.

இனிப்பு சோளம் கோ ( எஸ்எஸ் ) 33 தமிழகத்தின் முதல் இனிப்பு சோள ரகமாகும். ஹெக்டேருக்கு 2,500 கிலோ தானியம் மகசூலாக கிடைக்கும். சோளம் கோ 34 தானியம் மற்றும் தீவனத்துக்கு ஏற்ற ரகமாகும். தினை ஏடிஎல்2 திரட்சியான , எளிதில் உதிராத மணிகளை உடையது. பாசிப் பயறு விபிஎன் 7 ரகம் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புக்கு ஏற்றது. நிலக்கடலை கோ 8 ரகம் நடுத்தர பருமனான விதையுடையது.

பருத்தி விபிடி 2 குளிர்கால மானாவாரி மற்றும் நெல் தரிசில் பயிரிட ஏற்றது. தக்கைப் பூண்டு டிஆர்ஒய் 1 குறைவான கார்பன் தழைச்சத்து விகிதம் கொண்டது. அதேபோல், தோட்டக் கலைப் பயிர்களில் திராட்சை ஜிஆர்எஸ் ( எம்எச் )1, பலா பிகேஎம்2, வாழை காவிரி காஞ்சன், கத்திரி கோ3, கொத்தவரை எம்டியு2, வெள்ளை தண்டுக்கீரை பிஎல்ஆர் 2, சிவப்புக்கீரை கோ6, பல்லாண்டு முருங்கை பிகேஎம் 3, சிவப்புப் புளி பிகேஎம் 2, தென்னை விபிஎம் 6 ஆகிய ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x