Published : 02 Feb 2024 04:00 AM
Last Updated : 02 Feb 2024 04:00 AM
திருப்பூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஏ.சக்திவேல் ( பியோ தலைவர் ): மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் உள்ளதால் வரவேற்கிறேன். ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில, மத்திய வரிகள் திரும்பப்பெறும் திட்டத்தைமார்ச் 31-ம் தேதி 2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
தொழில் நுட்ப மேம்படுத்துதல் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இறக்குமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது ஒருவித சமநிலையோடு கூடிய திருப்தியை அளிக்கிறது.
கே.எம்.சுப்பிரமணியன் ( திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ): ஆடை உற்பத்தி நடைபெறும் பல்வேறு நிலைகளில் எரிபொருள் மீதான வரி, மின்சார உபயோகத்துக்கான வரி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு உபயோகப்படுத்தும். இது போன்ற பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதால் வரவேற்கிறோம்.
ஏ.சி.ஈஸ்வரன் ( சைமா சங்கம் தலைவர் ): தனி நபர் வருமான வரி ரூ.7 லட்சம் வரை வரிவிலக்கு செலுத்த தேவையில்லை. வரும் 2024 - 2025 ஆண்டுகளில் ரூ.2கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருதல், இளைஞர்களுக்கு கடன் உதவி வழங்கரூ.ஒரு லட்சம் கோடி நிதித் தொகுப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளதால் வரவேற்கிறோம்.
எம்.பி.முத்துரத்தினம் ( டீமா தலைவர் ): மத்திய பட்ஜெட் ஜவுளித் தொழிலை மறந்த பட்ஜெட்டாக உள்ளது. நாட்டில் விவசாயத்துக்கு அடுத்த படியாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தான் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்த தொழில் தொடர்பாக எந்த வித அறிவிப்புகளும் இல்லை. வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை, உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இல்லை என்பதைத் தான் இந்த பட்ஜெட் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT