Published : 02 Feb 2024 04:08 AM
Last Updated : 02 Feb 2024 04:08 AM

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் எப்படி? - நிபுணர்கள், விவசாயிகள் கருத்து

திருச்சி / தஞ்சாவூர் / கரூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம்: இடைக் கால பட்ஜெட் என்பதால் எதிர்பார்த்தபடியே வரி விகிதங்களில் மாற்றம் எதுவுமில்லை. ஆனால் சில வருவாய்களில் சலுகைகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. திருச்சி - பெங்களூர் கூடுதல் ரயில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகை அறிவித்திருக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பாராட்டத்தக்கது. எந்த நிலத்தையும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது.

எஸ்.புஷ்பவனம்

இது லஞ்சத்தை குறைக்கும். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சி மிக வேகமான வளர்ச்சி என்று கூறுவது சரியல்ல. நாட்டில் வேலை வாய்ப் பின்மை அதிகரித்துள்ளது. இதை போக்குவதற்கான செயல்திட்டம் குறித்து பட்ஜெட்டில் எதுவும் கூறவில்லை.

மகாதானபுரம் ராஜாராம்

குறை கூற முடியாத பட்ஜெட்: காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: கல்வி, ரயில், விமான சேவைகள் அதிகரிக்கப்படும். விவசாயிகள், மகளிர் நிலை மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் குறைகூற முடியாத வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பி.ஆர். பாண்டியன்

மானியங்கள் இல்லை: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்: லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், விவசாயிகள் உற்பத்தி சந்தைப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், இந்த பட்ஜெட் விவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி விட்டது. உரத்துக்கான பயன்பாட்டை குறைக்க வேண்டும், பாரம்பரிய வேளாண் முறைக்கு இயற்கை உர உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும் என நினைக்கிறதே தவிர, உர உற்பத்திக்கு தேவையான மானியங்கள் வழங்கப்படவில்லை.

சுந்தரவிமலநாதன்

வழக்கம் போல ஏமாற்றம்: தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்: கங்கையை தூய்மைப் படுத்த ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவிரியை தூய்மைப் படுத்த இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் 2 கோடி குத்தகை விவசாயிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

வேளாண் கடன் மற்றும் அதற்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்படவில்லை. வேளாண் இடுபொருட்கள், டீசல், பெட்ரோல் விலைதான் இதுவரை பல மடங்குகள் உயர்ந்துள்ளது. வேளாண் இயந்திரங்களுக்கு கூட ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு வழக்கம் போல ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஆர்.பழனிவேலு

தேர்தலை நோக்கிய பட்ஜெட்: பொருளாதார பேராசிரியர் ( ஓய்வு ) ஆர்.பழனிவேலு: விவசாய கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இளைஞர்களின் தனித்திறன் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்த அக்க்ஷாபார்க்கின் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது.

அதேபோல, இளைஞர்களுக்கு தொழில் வளர்ச்சி கடன் வழங்க ரூ.22.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ரயில் பெட்டிகள் 41,000 புதிய ரயில் பெட்டிகள் உருவாக்கப் படுகின்றன. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. மொத்தத்தில் எந்த எதிர்பார்ப்பும் பூர்த்தி அடையாத, தேர்தலை நோக்கிய இடைக்கால பட்ஜெட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x