Published : 24 Feb 2018 07:56 AM
Last Updated : 24 Feb 2018 07:56 AM
வா
ழ்க்கையில் பல முதல் நாள் அனுபவங்கள் நம் மனதிலிருந்து நீங்குவதில்லை. முதல் நாள் பள்ளி மேடையேறியது. முதல் நாள் கல்லூரிக்கு சென்றது. முதல் நாள் கம்பெனியில் முதலாளியாக சேரில் அமர்ந்தது. முதல் நாள் காதலியை, மனைவியை வெளியில் அழைத்துச் சென்றது. சேர்த்து இல்லை சார், தனித்தனியாக கூட்டிச் சென்றதைத் சொல்கிறேன்!
இவை முதல் நாள் மட்டுமல்ல, மனதில் முதன்மையான நாட்களும் கூட. நீண்ட நாள் நினைவில் நீங்காமல் நிற்கும் நினைவுகளாக இருப்பதுடன் வாழ்க்கையில் ஊக்கமும் உத்வேகமும் உற்சாகமும் தருபவை முதல் நாள் அனுபவங்கள்.
ஊழியர் ஆபிசில் சேரும் முதல் நாள் கூட அவருக்கு மறக்கமுடியாத முதல் நாள் அனுபவமே. உங்களை ஒன்று கேட்கிறேன். உங்கள் கம்பெனியில் பலரை புதியதாய் பணியில் சேர்த்திருப்பீர்கள். அவர்கள் சேரும் முதல் நாள் அனுபவம் அவர்களுக்கு மறக்கமுடியாத வண்ணம் அமைத்து அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உத்வேகம் தரும் முறையில் என்ன செய்கிறீர்கள்?
`ஆபீசில் அவர் சௌகரியமாக அமரும் விதமாக மேலே ஃபேனும், அவருக்கென்று சேரும் தருகிறேன்’ என்று கூறாதீர்கள். இதை சலூனில் கூட தருகிறார்கள். அதுவும் போதாதென்று வருபவரை அழகாய் போர்த்தி, தலைவாரி, மெருகேற்றி தலைக்கு மசாஜ் செய்து வேறு அனுப்புகிறார்கள். அதனால் சேர், ஃபேன் வகையறாக்களை விட்டு புதிய ஊழியர் முதல் நாள் அனுபவம் மறக்கமுடியாததாய் மாற்ற என்ன செய்கிறீர்கள்?
விழித்திருக்கும் வாழ்க்கையின் பெரும் பகுதியை உங்களுக்கும் உங்கள் கம்பெனி வளர்ச்சிக்கும் உழைக்கவும் உங்கள் தோளோடு தோள் கொடுக்க வருபவர்கள் ஊழியர்கள். அவர்கள் முதல் நாளை முதல் இரவு ரேஞ்சிற்கு மாற்றவேண்டாமா? அவர்களுக்கு சம்பளம் தருகிறீர்கள், ஓகே. அதோடு அவர்கள் உணர்வுக்கு உந்துதல் தரவேண்டாமா? அவர்கள் மனதிற்கு உற்சாகம் தரவேண்டாமா?
கொஞ்சம் சிந்தியுங்கள். அறியாத ஆபீஸ், தெரியாத இடம், புரியாத விதிகள், பழகாத மக்கள். இனம் புரியாத பயம். இதோடல்லவா நுழைகிறார் புதிய ஊழியர். என்னதான் அருகிலிருப்பவர்கள் அவர் மொழி பேசினாலும் அதில் பாதி புரிந்து பாதி புரியாமல் போகாதா? படித்த படிப்புக்கான பணி செய்வது எப்படி என்ற பதற்றம் இருக்காதா? கூட்டத்தின் மத்தியில் தனியாக உணர மாட்டாரா? தெரியாத இடத்தில் தெரிந்தே நுழைந்து தொலைந்தது போல் நிற்க மாட்டாரா? அவரை அனைவரும் சேர்ந்து அரவணைக்க வேண்டாமா. தோள் மீது கை போட்டு ‘வா நண்பா, உன்னைதான் எதிர்பார்த்திருந்தோம்’ என்று வரவேற்க வேண்டாமா. மாற்றவேண்டாமா முதல் நாளை அவர் என்றும் மறக்க முடியாதபடி!
நம் அனைவருக்கும் வாழ்க்கையில் தேவை ஸ்பெஷல் தருணங்கள். இனிய தருணங்களாக வாழ்க்கையை அலசும்போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. ஆனந்தப்படவைக்கிறது. வாழ்க்கையின் தருணங்களை தேடி தேர்ந்தெடுத்து அதை மறக்கமுடியாததாக மாற்றும் வகையில் முயற்சிகள் செய்யும் போது தான் வாழ்க்கை வாழத் தகுந்ததாகிறது.
பணியின் முதல் நாள் மேட்டருக்கு வருவோம். புதிய ஊழியர்கள் வரவேற்பது என்பது அவருக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கி, அவர் கையில் சில ஃபார்ம்களை தந்து ஃபில் அப் செய்ய சொல்லி அவர் வேலை என்ன என்று ஒரூ சூப்பர்வைசர் கொண்டு தெரிவிப்பது என்று தான் பல கம்பெனிகள் நினைக்கின்றன. முதல் உணர்வை முதல் தரமான உணர்வாக்கும் வல்லமை இரண்டாவது முறை கிடைப்பதில்லை. புதிய ஊழியரிடம் ‘நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்’ என்ற உணர்வை தரும்போது தான் அவர் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உணர்வில் புதிய உத்வேகம் அளித்து அவர் சிறப்பாக பங்களிக்க வைக்க முடியும்.
போட்டியாளர்களை சமாளிக்கவும் மார்க்கெட்டில் முன்னேறவும் வியூகம் அமைப்பது போல் புதிய ஊழியர்களுக்கு வரவேற்பு வியூகம் அமைத்துக்கொள்ளுங்கள். ட்ராவல் அலவன்ஸ் ரூல்ஸ், லீவு ரூல்ஸ் என்று கண்டதெற்கெல்லாம் ப்ரிண்ட் போட்டு புத்தகம் வைத்திருக்கிறீர்களே. புதிய ஊழியரை வரவேற்க ஒரு திட்டம் வகுத்து அதை புத்தகமாக்கி மற்ற ரூல்ஸ் புத்தகங்களோடு வையுங்கள். இக்கம்பெனி புதிய ஊழியர் வரவேற்பை சீரியசாக பார்க்கிறது என்பது அனைவருக்கும் தெரியவேண்டும். புதிய ஊழியரை வரவேற்பது என்பது ஆபீஸ் முழுவதும் ஒரு கலாசாரமாக மாற்றவேண்டும்.
புதிய ஊழியர் ஆபீசில் நுழையும்போது அவரை வரவேற்க இருக்கும் ஊழியர்களில் ஒருவரை நியமியுங்கள். சேர்வதற்கு சில நாள் முன்பு அவர் புதிய ஊழியரை அழைத்து ‘எத்தனை மணிக்கு வருகிறீர்கள், உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்’ என்று கூறினால் புதிய ஊழியருக்கு எத்தனை உற்சாகமாக இருக்கும். அவர் நுழையும் போது வாசலில் நின்று வரவேற்று ஒரு சின்ன பூங்கொத்தோ அட்லீஸ்ட் ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தோ ‘வெல்கம்’ என்று கூறினால் இக்கம்பெனியில் முன்பே சேர்ந்திருக்க கூடாதா என்று புதிய ஊழியருக்கு தோன்றாதா!
பல ஆபிசில் புதிய ஊழியர்களை ஏதோ பலி ஆடு போல் கையில் கயிற்றை கட்டி இழுத்துக்கொண்டு போகாத குறையாக ஆபீஸ் முழுவதும் தரதரவென்று அழைத்துப் போய் ஒவ்வொருவராய் கடனே என்று அறிமுகம் செய்கிறார்கள். கேவலம் ஒரு ஃபோன் நம்பரையே நம்மாள் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரே நாளில் ஐம்பது, அறுபது பேரை அறிமுகம் செய்தால் என்ன ஞாபகம் இருக்கும்? இல்லை யாரைத் தான் ஞாபகம் இருக்கும்?
அதற்கு பதில் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போது அவரின் ஆபிசிற்கு அப்பாற்பட்ட ஒரு குணாதியசத்தை குறிப்பிடும் போது அவர் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள ஏதுவாக இருப்பதோடு அவர் மீது ஒரு அன்னியோன்யமும் வளரும். ‘இவர் தான் மிஸ்டர் ஜான். இவர் பாடி நீங்க கேட்கனுமே, ஆஹா, சாட்சாத் ஜேசுதாஸ் குரல் இவருக்கு’. ‘இது மிசஸ் மஞ்சு. இவங்க பண்ற பிஸிபேலாபாத்துக்கு ஆபிஸ்ல பெரிய ரசிகர் மன்றமே இருக்கு’. இப்படி அறிமுகம் செய்யும் போது மொத்த ஆபிஸிற்கும் ஒருவித மனிதத்தன்மை மலர்ந்து ஒரு குடும்பத்தோடு பணியாற்ற வந்திருக்கிறேன் என்று புதிய ஊழியர் மனதில் தோன்றும் இல்லையா!
ஒவ்வொரு கம்பெனிக்கென்றும் ஒரு கலாசாரம் தேவை. இவையே இந்த கம்பெனியின் வேல்யூஸ். இப்படித் தான் இக்கம்பெனியின் நடத்தை இருக்கும் என்பதை சேரும் புதிய ஊழியர் விரைவில் புரிந்துகொள்வது அவரையும் அந்த கலாசாரத்தில் ஐக்கியமாக்க உதவும். கம்பெனியிலும் அவருக்கு சக ஊழியர்கள் நல்ல நண்பர்களாவார்கள். பணி செய்யும் இடத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் 47% தங்கள் பணியையும், கம்பெனியையும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இது என்னுடைய கம்பெனி, இதன் வளர்ச்சிக்கு என் பங்களிப்பு உண்டு என்று நினைக்கும் ஊழியர்கள் இன்னமும் கூட மனமுவந்து பணி புரிவார்கள். மற்றவர்கள் தவறோ தப்போ செய்தால் கூட அதைத் தட்டிக் கேட்கும் மன தைரியம் பெறுவார்கள்.
உங்கள் ஆபீஸிற்கென்று பிரத்யேகமான பணியில் சேரும் முதள் நாள் அனுபவத்தை உருவாக்குங்கள். உற்சாகமாக உழைக்கும் ஊழியர்கள் அதிகமாவதோடு பணியை விட்டு விலகுவோர் எண்ணிக்கையும் கண்டிப்பாய் குறையும். கணிசமாய் குறையும்.
ஆனால் இது போல் ஊழியர்களை முதல் நாள் வரவேற்று அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருவதில் ஒரு ப்ராப்ளம் இருக்கவே செய்கிறது. இருக்கும் ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு மீண்டும் புதியதாய் சேர்கிறேன் ப்ளீஸ் என்று தங்கள் ரெசிக்னேஷன் லெட்டரையும், அப்ளிகேஷன் ஃபார்மையும் சேர்த்து நீட்டுவார்கள். பரவாயில்லையா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT