Last Updated : 07 Feb, 2018 07:12 AM

 

Published : 07 Feb 2018 07:12 AM
Last Updated : 07 Feb 2018 07:12 AM

என்னங்க சார் உங்க திட்டம்...?

டுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரப் போகிறது. திரும்பவும் ஆட்சிக்கு வரணும்னா.. பாஜகவை ஆதரிக்கிற நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏகப்பட்ட சலுகைகள் இருக்கும். வருமான வரியே கட்ட வேண்டியது இருக்காது. அதற்குப் பதில் வங்கிப் பரிமாற்ற வரிதான் இருக்கும்.. ஏகப்பட்ட பணம் மிஞ்சும்.. வீடு வாங்கலாம், நிலம் வாங்கலாம்.. முதலீடு செய்யலாம்... இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த நடுத்தர மக்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள்.

நடுத்தர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. ஒரு 50 ஆயிரமாவது உயர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என புலம்பாத ஆட்களே இல்லை. சரி உச்சவரம்புதான் உயர்த்தப்படவில்லை. புதிதாக வரியாவது விதிக்காமல் இருந்திருக்கலாமே நிதியமைச்சர் ஜேட்லி என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

நிரந்தரக் கழிவு முறை மீண்டும் இந்தப் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்த வேண்டிய வருமானத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை கழித்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். இதனால் ஏற்கனவே, சம்பளத்தின் ஒரு பகுதியாக பயணப்படிக்கும் மருத்துவச் செலவுக்கும் அலவன்ஸ் வாங்குபவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. மேலும் கல்வி வரி 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளதால், அதற்காக கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் வாங்கும் ஒருவர் ஏற்கனவே, ரூ.34,200 வரை போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுக்கு பில்களைக் கொடுத்து வரிச் சலுகை பெற்று வருகிறார். இந்த சலுகை ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவரைப் பொருத்தவரை 5800 கூடுதல் சலுகை. இதற்கு அவர் 20 சதவீத வரி செலுத்தி வந்திருந்தால், அவருக்கு மிச்சமாகும் லாபம் வெறும் ரூ.1160 தான்.

ஆனால், ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள், ஆண்டுக்கு அத்தனை கழிவுகளும் போக, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 வரி செலுத்தி வருவார்கள். தற்போது கூடுதலாக 1 சதவீத கல்வி வரி செலுத்தும் வகையில் ரூ.1125 கையிலிருந்து போகும். நிரந்தரக் கழிவு வகையில் கிடைத்த ரூ.1160 லாபத்தில் இந்த ரூ.1125-ஐ கழித்தால் வெறும் ரூ.35 தான் லாபம். ஒரு பக்கம் சலுகை தருவதாக அறிவிப்பு. மறுபுறம் இன்னொரு வகையில் கூடுதல் வரி மூலம் சுமை. ஆக மொத்தம் லாபம் எனப் பார்த்தால் இவ்வளவுதான் என்பது நடுத்தர மக்களின் கருத்து.

``அதிக சம்பளம் வாங்குபவர்கள்தான் பயணப்படி, மருத்துவச் செலவு போன்றவற்றுக்கான பில்களை காட்டி வரிச் சலுகைகளை பெற்று கொள்கிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகை கிடையாது. தற்போது ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், பயணப்படி, மருத்துவச் செலவு சலுகைகள் இல்லாத மற்ற தொழிலாளர்களுக்கு இந்த நிரந்தரக் கழிவு லாபம்தான்'' என்கிறார் வருமான வரித் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

அடுத்ததாக, பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்துக்கு அதிகமான நீண்ட கால முதலீட்டு ஆதாயத்தின் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் நடுத்தர மக்களுக்கு மிகப் பெரும் அடியாகும். உலகிலேயே அதிகம் சேமிப்பு வைத்திருப்பது இந்தியர்கள்தான். வருமானத்தில் 25 சதவீதம் வரை சேமிக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். இதை நிலம், வீடு, தங்கம் போன்றவற்றில்தான் முதலீடு செய்வது வழக்கம். இந்தியர்களில் வெறும் 2 சதவீத மக்கள்தான் பங்குகளிலும் பரஸ்பர நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர். வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் வட்டி குறைந்து விட்டதால், இப்போதுதான் நடுத்தர மக்கள் பங்குகள். பரஸ்பர நிதி நிறுவனங்களின் திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அதற்கும் இப்போது வேட்டு வைத்து விட்டார்கள் என்கின்றனர் நடுத்தர மக்கள்.

ஓய்வூதியம் கிடைக்காத பணியில் இருக்கும் நடுத்தர மக்கள் அதிக அளவில் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர முதலீடுகள் மூலம் கணிசமான தொகையை ஓய்வு காலத்துக்கு சேமிப்பது அவர்கள் வழக்கம். ஆனால் வரும் லாபத்தில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது, சேமிப்பு மீதான ஆர்வத்தைக் குறைக்கும் செயலாகும் என பரஸ்பர நிதி நிறுவனங்களே வருத்தம் தெரிவித்துள்ளன.

ஆனால், நடுத்தர மக்களுக்குத் தொடர்ந்து பல சலுகைகளை அளித்து வருவதாக நிதியமைச்சர் ஜேட்லி பட்ஜெட்டுக்குப் பிறகு ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ``முதல் பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பபை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினேன். 80 சி-யின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரித்தேன். வீட்டுக் கடன் கழிவை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தினேன். கடந்த ஆண்டில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதமாக இருந்த வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த முறை நிரந்தரக் கழிவு சலுகையை மீண்டும் கொண்டு வந்து, ரூ.8 ஆயிரம் கோடிக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது இதுபோக மூத்த குடிமக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியிருக்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.

``ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட துறையினருக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முறை விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் அதிக பலன் கிடைக்கும் வகையில் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். குறிப்பாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 10 கோடி மக்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது. இதற்காக மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்`` எனக் கூறியிருக்கிறார் ஜேட்லி.

அதிகரித்து வரும் மாதாந்திர வீட்டுச் செலவுகள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை சமாளிக்க முடியாமல்தான் வரிச் சலுகையை எதிர்பார்த்திருக்கிறார்கள் நடுத்தர மக்கள். இதுபோன்ற சூழலில் பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும்படியாக சலுகைகள் இல்லாதது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டில் பொதுத் தேர்தல் வருகிறது. பாஜகவை பொருத்தவரை இதுதான் கடைசி பட்ஜெட். அதனால் இந்த பட்ஜெட்டில் அதிக வரிச் சலுகை அளிக்கப்படும். மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பொதுத் தேர்தலில் வெற்றி பெற, ஏற்கனவே வெற்றி பெற்றதற்கு உதவிய நடுத்தர மக்களுக்கு இதுபோன்ற வரிச் சலுகைகள் அள்ளி வழங்கப்படும் என எதிர்க் கட்சிகளே கூட எதிர்பார்த்தன. ஆனால் எதுவும் நடக்கவில்லை.

என்னங்க சார் உங்க திட்டம்...?

அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் பாஜகவுக்கு இரண்டே வழிகள் இருக்கிறது. ஒன்று தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை அளித்து அவர்களை குஷியாக வைத்துக் கொள்வது. இன்னொன்று போர். சலுகை இல்லையென்று ஆகி விட்டது. எனவே தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானோடு சிறிய போர் நடக்கலாம் என எச்சரிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஏற்கனவே எல்லை தாண்டி ஊடுருவி துல்லியத் தாக்குதல் நடத்தி வரும் இந்தியப் படை, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதியில் முழு அளவு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். போர் எப்போதெல்லாம் நடந்ததோ, அப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அந்த பார்முலாவை இந்த முறை பாஜக பயன்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்.

ravindran.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x