Published : 24 Jan 2024 11:34 PM
Last Updated : 24 Jan 2024 11:34 PM
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சந்தை மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைந்துள்ளது. இதில் முதலிடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனமாக அறியப்படுகிறது மைக்ரோசாஃப்ட். கடந்த 1975-ல் நிறுவப்பட்டது. கணினிகளை இயக்க உதவும் விண்டோஸ் இயங்குதளம், மைக்ரோசாஃப்ட் 365, ஸ்கைப் போன்ற பிராண்டுகளுக்காக மக்களிடையே இந்நிறுவனம் அறியப்படுகிறது. அண்மைய காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஏற்றம் கண்டது. அந்நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதம் ஏற்றம் கண்ட காரணத்தால் தற்போது அதன் பங்கின் விலை 404.72 டாலர்கள். அதன் மூலம் அந்நிறுவத்தின் சந்தை மதிப்பு 3 டிரியல்லன் டாலர்களை எட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 0.14 சதவீதம் ஏற்றம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ சார்ந்த சேவைகளை பயனர்களுக்கு வழங்கியது மைக்ரோசாஃப்ட். இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்தது. அதனால் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கினர். அதனால் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை நீடித்த மற்றும் நிலையான வகையில் கட்டமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT