Published : 23 Jan 2024 05:26 PM
Last Updated : 23 Jan 2024 05:26 PM
புதுடெல்லி: அடுத்து வரும் 2024-25 நிதி ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயரும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பகவான் ராமர் நமக்கு அருள்கிறார். தற்போது நாம் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாகவும், பங்குச் சந்தையில் 4-வது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுத்திருக்கிறோம். அடுத்த ஒன்றிரெண்டு ஆண்டுகளில், நாம் நான்காவது பெரிய பொருளாதாரமாக மட்டுமல்ல, அதைத் தாண்டியும் முன்னேறிச் செல்வோம் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய பொருளாதாரம் 2028-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று என்னிடம் ஒருவர் சொன்னார். அப்போது நான், 2028 வரை காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்று நான் அவரிடம் சொன்னேன். 2024-25 நிதி ஆண்டில் அது நிகழும். 2030-ம் ஆண்டுக்குள் நாம் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுப்போம். இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு, ஆட்போமொபைல், எரிசக்தி, இயற்கை எரிவாயு என எந்த துறையாக இருந்தாலும், அதன் மீதான உலகின் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, இந்திய பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.
தற்போது இந்திய பொருளாதாரம் 3.7 டிரில்லியன் டாலர் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய பொருளாதார வளர்ச்சி 2021-22ல் 8.7 சதவீதமாகவும், 2022-23ல் 7.2 சதவீதமாகவும் இருந்தது. 2023-24ல் அது 7.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தையைப் பொருத்தவரை அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹாங் காங் நான்காவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், நேற்று இந்திய பங்குச் சந்தையில் 4.33 டிரில்லியன் டாலர் மதிப்பு பங்குகள் பட்டியலிடப்பட்டன. ஹாங் காங் 4.29 ட்ரில்லியன் டாலர் மதிப்பு பங்குகளை பட்டியலிட்டது. இதையடுத்து, 4வது இடத்தில் இருந்த ஹாங் காங்-கை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
கடந்த டிசம்பர் 5ம் தேதி இந்தியா முதன்முறையாக 4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்தான் இந்திய பங்குச் சந்தையில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பு பங்குகள் பட்டியலிடப்பட்டன. இது இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதன் அறிகுறி என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT