Published : 19 Jan 2024 07:40 PM
Last Updated : 19 Jan 2024 07:40 PM
புதுடெல்லி: கூகுள் பே மூலம் யுபிஐ முறையில் உலக நாடுகளில் இந்தியர்கள் பணம் செலுத்தும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளும் வசதி, உலக நாடுகளில் யுபிஐ பேமென்ட் முறையை கட்டமைப்பது, உலக நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பும் நடைமுறையை எளிதாக்குவது என மூன்று முக்கிய நோக்கத்தை முன்வைத்து இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல். முக்கியமாக இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிநாட்டு கரன்சி மற்றும் கிரெடிட் கார்டு / ஃபாரக்ஸ் கார்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பணம் செலுத்துவதை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், பயனர்களுக்கு வசதியான முறையிலும் மேற்கொள்ளும் மற்றொரு நிலையாக இது அமையும் என கூகுள் பே இந்தியாவின் பார்ட்னர்ஷிப் இயக்குனர் திக்ஷா கவுஷல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யுபிஐ பயனர் தனது வங்கிக் கணக்கில் இருந்து அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர யுபிஐ லைட் சேவையும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT