Published : 18 Jan 2024 06:52 AM
Last Updated : 18 Jan 2024 06:52 AM
புதுடெல்லி: முதலீடு திட்டங்களை தேர்வு செய்வதில் இந்தியப் பெண்கள் மிகவும் கவனமாக செயல்படுவதாக டிபிஎஸ் வங்கி மற்றும் கிரிசில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிதி தொடர்பாக முடிவெடுப்பதில் நகர்ப்புற இந்தியப் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள் ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யவே விரும்புகின்றனர். அதன்படி, 51% பெண்கள் தங்களது முதலீட்டு தொகுப்புக்கு நிலையான வைப்பு நிதி திட்டம் (எப்டி) மற்றும் சேமிப்பு கணக்கையே (எஸ்பி) தேர்வு செய்கின்றனர்.
பத்து நகரங்களில் உள்ள 800-க்கும்மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பெருநகரங்களில் சம்பாதிக்கும் பெண்களில் நிலையான வைப்பு திட்டங்களை தவிர தங்கத்தில் 16% பேரும், மியூச்சுவல் பண்டுகளில் 15% பேரும், ரியஸ் எஸ்டேட்டில் 10% பேரும் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால், பங்குச் சந்தை திட்டங்களில் வெறும் 7% பெண்கள் மட்டுமே முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர்.
பெண்கள் சுயதொழில் அல்லது மாத சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும் குடும்ப நிதி சேமிப்பு தொடர்பான முடிவுகளில் அவர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். 47% பேர் சுதந்திரமான நிதி திட்டங்களையே தேர்வு செய்கின்றனர். எனினும், இது வயது, வசதிகளை சார்ந்தே உள்ளது.
25-35 வயதுடையவர்களுடன் ஒப்பிடும்போது 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயாதீனமான நிதித் தேர்வுகளில் முன்னணியில் உள்ளனர். வீடு, குழந்தைகளின் கல்வி, மருத்துவ பராமரிப்பு என பெண்களின் வயதுக்கு ஏற்ப இலக்குகள் மாறுகின்றன. 43% திருமணமான பெண்கள் தங்கள் வருமானத்தில் 10-29% முதலீட்டிற்கு ஒதுக்குகின்றனர்.
கிரெடிட் கார்டு மற்றும் கடன் வாங்குவதில் பிராந்திய அளவில் மாறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, மும்பையில் 96% பெண்கள் கிரெடிட் கார்டையே நம்பியுள்ளனர். அதேசமயத்தில், கொல்கத்தாவில் 63% பெண்கள் மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறார்கள்.
அதேசமயம், அதிக சம்பளம் பெறும் பெண்களில் பாதிபேர் கடன் வலையில் சிக்குவதில்லை. ஆனால், வீட்டுக் கடன் அவர்கள் விருப்பத் தேர்வாக உள்ளது. இது, வீட்டு உரிமையாளராக வேண்டும் என்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது
25-35 வயதுடைய பெண்களில் 33% பேர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக யுபிஐ மூலம் பேமண்ட் செய்யவே விரும்புகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22% பேர் மட்டுமே இம்முறையை ஆதரிக்கின்றனர்.
பணப் பரிமாற்றம் (38%), பயன்பாட்டு கட்டண பில்கள் (34%), இணையவர்த்தக நிறுவனங்கள் மூலம் பொருட்கள் வாங்குதல் (29%) உள்ளிட்ட பல சேவைகளுக்கு யுபிஐ வழியாக பணம் செலுத்தவே விரும்புகின்றனர். இது, மக்களுக்கு ரொக்கத்தின் மீதான மோகம் குறைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT