Published : 16 Jan 2024 02:12 PM
Last Updated : 16 Jan 2024 02:12 PM

தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யலாம்: விமான போக்குவரத்து இயக்குநரக புதிய விதிகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: குளிர்காலத்தில் வடமாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இந்தக் குழப்பமான சூழ்நிலையை கையாள்வதற்கு புதிய விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ளது.

பயணம் மறுக்கப்படுதல், விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் போன்ற காரணங்களால் விமான நிறுவனங்களால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கூறும் DGCA நிலையான இயக்க விதிகள் (SOP) குறிப்பிட்ட காரணங்களுக்களுக்காகவோ அல்லது மூன்று மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் SOP-யை உடனடியாக கடைபிடிக்க வேண்டும். என்றாலும் விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் மீறிய அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த விதிகள் பொருந்தாது என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நிலையான இயக்க விதிகள்: விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களின் எவ்வளவு நேரம் தாமதமாகும் என்ற சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பாதிக்கப்படும் பயணிகளுக்கு முன்கூட்டியே தாமதம் குறித்து எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும். விமான நிறுவனங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு விமான தாமதம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும். தாமதம் குறித்தும் தகுந்த முறையில் தொடர்பு கொள்வதற்கு விமான நிறுவன ஊழியர்களுக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதனிடையே, திங்கள்கிழமை தலைநகர் டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், மதியம் 1 மணி அளவில் விமான இயக்கம் குறித்து இண்டிகோ விமானத்தின் விமானி அறிவிப்பை வழங்கினார். கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த பயணி ஒருவர், திடீரென நடந்து சென்று விமானியை தாக்கத் தொடங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். விமானி மீது பயணி தாக்குதல் நடத்திய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக வைரலானது.

முன்னதாக, வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை, 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன, சுமார் 100 விமானங்கள் தாமதமாகிவிட்டன. மேலும், சில விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் திரும்பவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திங்கள்கிழமை தெரிவித்தார். தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் வெளியிட்ட பதிவில், "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. காட்சி தெரியும் நிலை பலமணி நேரங்களுக்கு நிலையில்லாமல் இருந்து. காலை 5 மணி முதல் 9 மணி வரை காட்சித் தெரிவு நிலை பூஜ்ஜியமாக இருந்தது. இதனால், விமான நிலைய அதிகாரிகள் CAT III ஓடுபாதைகளிலும் விமான போக்குவரத்தை சில மணி நேரம் நிறுத்தி வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த முடிவுகள் அனைத்தும் விமான பயணிகளின் நலனை மனதில் வைத்தே எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x