Published : 14 Jan 2024 12:43 PM
Last Updated : 14 Jan 2024 12:43 PM

மதுரைக்கு டிக்கெட் ரூ.17,262 - சென்னையில் விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்வு @ பொங்கல்

சென்னை: பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை முதல் ( ஜன.15 ) வரும் 17-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிற்றுக் கிழமைகள் சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தவர்கள், விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த சில நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்றும் பயணிகள் கூட்டம், வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து, இந்த நகரங்களுக்கு செல்லும் உள் நாட்டு விமானங்களில், டிக்கெட்டுகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனாலும் கட்டண உயர்வு குறித்து கவலைப் படாமல், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி விமானங்களில் பயணிக்கின்றனர்.

எண்ணிக்கை குறைவு: கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ள அதே நேரத்தில், டிக்கெட் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதால், பயணிகள் கட்டணம் உயர்வை பற்றி கவலைப் படாமல் உடனடியாக, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். சென்னை – தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,624 ஆகும். ஆனால், நேற்று கட்டணம் ரூ.13,639 ஆக இருந்தது.

சென்னை – மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,367. நேற்று ரூ.17,262 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னை – திருச்சிராப்பள்ளிக்கு வழக்கமான கட்டணம் ரூ.2,264. ஆனால், நேற்று ரூ.11,369 ஆக இருந்தது. சென்னை – கோயம்புத்தூருக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,315 ஆகும். நேற்று கட்டணமாக ரூ.14,689 நிர்ணயிக்கப்பட்டது. சென்னை – சேலத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.2,290. நேற்று கட்டணம் ரூ.11,329 ஆக இருந்தது.

கூடுதல் சேவை தேவை: இதேபோல, பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல் தவித்தனர். எனவே, இதுபோன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x