Last Updated : 14 Jan, 2024 04:10 AM

 

Published : 14 Jan 2024 04:10 AM
Last Updated : 14 Jan 2024 04:10 AM

கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளுகை அதிகரிப்பு

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் வெளி நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,413.16 டன் மற்றும் உள் நாட்டு பிரிவில் 7,145.70 டன் என மொத்தம் 8,559 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

கோவை பீளமேடு விமான நிலையம் கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை உள்ளிட்ட சுற்றுப் புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 23 முதல் அதிகபட்சமாக 28 விமானங்கள் வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப் படுகின்றன. ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் சேவை மட்டுமின்றி சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்கு என ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து வசதி உள்ள நாடுகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு ‘பாண்டட் டிரக்’ சேவை மூலம் சரக்குகள் கையாளப்படுகின்றன. பாண்டட் டிரக் சேவை என்பது கோவையில் புக்கிங் செய்த சரக்குகளை டிரக் வாகனங்களில் ஏற்றி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு தரை வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்பி வைக்கப்படும்.

கோவை விமான நிலையத்தில் கடந்தாண்டு சரக்கு போக்குவரத்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: கரோனா தொற்று பரவலுக்கு முன் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 750 டன், வெளிநாட்டு பிரிவில் 250 டன் என ஆயிரம் டன் மற்றும் அதற்கு மேல் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2023-ம் ஆண்டு சரக்கு போக்குவரத்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 1,413.16 டன் மற்றும் உள்நாட்டு பிரிவில் 7,145.70 டன் என மொத்தம் 8,559 டன் சரக்குகள் கையாளப் பட்டுள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்நாட்டு பிரிவில் 902.71 டன் மற்றும் வெளி நாட்டு பிரிவில் 141.98 டன் என மொத்தம் 1,045 டன் சரக்குகள் அந்த ஒரு மாதத்தில் மட்டும் கையாளப்பட்டுள்ளன. விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நிலம் பெறுவது தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்பது குறித்து விமான நிலைய ஆணையகத்தின் தலைமையகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்படும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படும். இதனால் விமான போக்குவரத்து மட்டுமின்றி உள்நாடு மற்றும் வெளநாடுக்கு கையாளப்படும் சரக்குகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x