Published : 14 Jan 2024 04:16 AM
Last Updated : 14 Jan 2024 04:16 AM

போதிய விலை கிடைக்காததால் வெல்லம் தயாரிப்பை கைவிட தயாராகும் வேலூர் விவசாயிகள்

கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு கிராமத்தில் கரும்புச்சாறில் இருந்து பாகு காய்ச்சி பதமான சூட்டில் வெல்லம் உருண்டை உருட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி பரப்பளவு குறைந்து வருவதால் வெல்லம் தயாரிப்பை கைவிடும் முடிவில் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை செழிப்பாக்கியதில் பாலாறுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் ஓடும் வெள்ளப் பெருக்கால் ஆற்றையொட்டிய நிலப்பரப்புகளின் விவசாயம் வளம் கொழித்தது. நெல்லுக்கு அடுத்தபடியாக பணப் பயிர்களான கரும்பு, வாழை உள்ளிட்டவை விவசாயிகளின் வாழ்க்கையை பெரிதாக வளர்த்தது. வேலூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு உயிர் தந்த வாழையும், கரும்பும் இன்று கை கொடுக்காமல் உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது என்பதற்கு உதாரணமாக இருப்பது இங்குள்ள சர்க்கரை ஆலைகளை உதாரணமாக கூறலாம். வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்தனர். அதேபோல், சர்க்கரை ஆலைகளுக்கு இணையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிப்பும் இருந்தது. ஆனால், இன்று வெல்லம் தயாரிப்பு பணி மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் கவசம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் கூறும்போது, ‘‘எனக்கு சொந்தமான 7 ஏக்கரில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரித்து வருகிறேன். இரண்டாவது தலைமுறையாக நான் வெல்லம் தயாரித்தாலும், வரும் காலங்களில் இதை செய்ய முடியுமா? என தெரியவில்லை. வெல்லம் தயாரிப்பு ஒவ்வொரு ஆண்டும் மோசமான நிலைக்கு செல்கிறது. ஓர் ஏக்கர் கரும்பில் இருந்து சராசரியாக 5 டன் வெல்லம் தயாரிக்க முடியும்.

விவசாயி சிவக்குமார்

ஆனால், மண்ணின் தன்மை மாறியதால் போதுமான அளவுக்கு கரும்பும் உற்பத்தி ஆவதில்லை. வெல்லம் தயாரித்து வேலூர் மண்டிகளில் கொடுத்தாலும், அங்கும் எங்களுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. இப்போது, 10 கிலோ ரூ.450 முதல் ரூ.470 வரைதான் கிடைக்கிறது. ஆனால், வெளி சந்தையில் ரூ.800 முதல் 900 வரை விற்கப்படுகிறது. வெல்லத்தால் இடைத்தரகர்கள் தான் பயன் பெறுகிறார்கள்’’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் கவசம் பட்டு, முடினாம்பட்டு, கொத்தமங்கலம், வாழ்வான்குன்றம், அகரஞ்சேரி, வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விளைச்சலுடன் வெல்லம் தயாரிப்பும் உள்ளது. இங்கெல்லாம் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்பு உற்பத்தி பரப்பளவும் குறைந்து வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்திஉள்ளது. ஒரு பக்கம் சர்க்கரை ஆலைகளை மூடிய நிலையில் வெல்லம் தயாரிப்பும் போதுமான விலை இல்லாததால் அதை தயாரிப்பதையும் கைவிட்டு வருகின்றனர்.

‘‘கரும்பில் இருந்து வெல்லத்தை மட்டும் தயாரிக்காமல் விரைவில் நாட்டு சர்க்கரை தயாரிப்பையும் செய்யலாம்’’ என முடிவெடுத்துள்ளதாக கூறும் சிவக்குமார், ‘‘கர்நாடக மாநிலத்தில் இருந்து தரமான கரும்பு உற்பத்தியாவதால் அங்கிருந்து கரும்பை வாங்கி வந்து நாட்டு சர்க்கரை தயாரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். இதற்காக, பொங்கலுக்கு பிறகு பயிற்சி எடுக்க உள்ளேன். வேறு வழி தெரியவில்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x