Published : 13 Jan 2024 06:08 AM
Last Updated : 13 Jan 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.6.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் திருவிழாவுக்கு அடுத்த நாள் வரும் காணும் பொங்கல் விழாவில், மக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக பொங்கலை ஒட்டி வரும் வாரச்சந்தைகளில் ஆடுகள், நாட்டுக் கோழிகள் விற்பனை அதிகரிக்கும். இதற்காக கிராமப்புறங்களில் பலர் ஆடுகள், கோழிகளை வளர்த்து சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருவர்.
அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி சந்தைக்கு கொண்டு வந்தனர். இதேபோல், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்கிச் செல்ல, வேலூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.
10 கிலோ எடை ஆடு: இதுகுறித்து ஆடு வியாபாரிகள் சிலர் கூறும்போது, வருகிற 17-ம் தேதி காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதே போல் கிராமங்களில் இஷ்ட தெய்வங் களுக்கு ஆடுகளை பலியிட்டு, பங்கிட்டு பிரித்துக் கொள்வர்.
பண்டிகை காலங்கள் இல்லாத நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையான நிலையில், நேற்று ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.
இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் 8 ஆயிரம் ஆடுகள் சுமார் ரூ.6.50 கோடிக்கு மேல் விற்பனையானது.
இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், நாளை (14-ம்தேதி) போச்சம்பள்ளி சந்தையிலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT