Published : 12 Jan 2024 07:50 PM
Last Updated : 12 Jan 2024 07:50 PM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணிக்காய் மற்றும் பரங்கிக்காய் விளைச்சல் அமோகமாக இருப்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள் பூரிப்பில் உள்ளனர். விவசாயத்தை முக்கியமான தொழிலாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்ட விவசாயிகள் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை மாநிலத்திலேயே மிக அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இது தவிர சின்ன வெங்காயம், கரும்பு ஆகியவற்றையும் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகம் உள்ளதால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கரும்பில் பொக்கொபோயங் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகளும் மகசூல் பாதித்து நஷ்டமடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி, பருத்தி வெடிக்கும் சமயத்தில் மழை ஆகிய காரணங்களால் இந்த பயிர்களை விளைவித்த விவசாயிகளும் பெரும் சங்கடத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில விவசாயிகள் மாற்றுப் பயிர் விளைவிக்க முடிவு செய்து சிலர் பூசணிக்காய், பரங்கிக்காய் பயிரிட ஆரம்பித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்பாடி, இறையூர், எறையசமுத்திரம், கொளக்காநத்தம், கொளப்பாடி, திம்மூர், அணைப்பாடி, வரகூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிரான பூசணிக்காய், பரங்கிக்காய் பயிரை அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 3- 4 மாத பயிரான பூசணி, பரங்கிக்காய் அறுவடை தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறையினர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்ததாவது: வயல்களில் அவ்வப்போது பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும். ஒரே மாதிரி பயிரை தொடர்ந்து பயிர் செய்தால் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் ஆகியவற்றை தவிர்க்க முடியாது.
மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல், கரும்பில் பொக்கபோயங் நோய் தாக்குதல், சின்ன வெங்காயம் பயிரில் திருகல் நோய் தாக்குதல் ஏற்பட மிக முக்கிய காரணம் ஒரே பயிரை தொடர்ச்சியாக பயிர் செய்வதுதான்.
பயிர்களில் நோய், பூச்சி தாக்குதலை தவிர்க்க விவசாயிகள் பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும் என வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதன் பலனாக விவசாயிகள் பலர் மாற்றுப் பயிர்கள் பயிரிட தொடங்கியுள்ளனர்.
இது வரவேற்கத்தக்க நல்ல முடிவு. பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் வழக்கமான பயிர்களுக்கு மாற்றாக சிறு தானியப் பயிர்கள், பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
பூசணிக்காய், பரங்கிக்காய் பயிர்களை சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். 4 மாத பயிரான பூசணி, பரங்கிக்காய் அறுவடை காலம் டிசம்பர், ஜனவரி மாதம். இப்போது அறுவடை சீசன். தற்போது பண்டிகை காலமாக உள்ளதால் நல்ல விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொளக்காநத்தத்தைச் சேர்ந்த பூசணி பயிரிட்டுள்ள விவசாயி தர் கூறியது: ஒரு ஏக்கர் நிலத்தில் பூசணிக்காய், பரங்கிக்காய் 12 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கிறது. விதை, உரம் உட்பட அனைத்துக்கும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு செலவு ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஒரு கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பூசணி, பரங்கிக்காய்களில் செய்யப்படும் உணவுப் பொருட்களின் சுவை கூடுதலாக இருக்கும். மேலும், இங்கு பயிராகும் பூசணி, பரங்கிக்காய்கள் எளிதில் அழுகாத தன்மை கொண்டவை. இவற்றை முறையாக காற்றோட்டமான இடத்தில் வைத்துபாதுகாத்து வந்தால் 3 மாதம் வரை வைத்திருந்து விற்பனை செய்யலாம். இதனால் பெரம்பலூர் பூசணி, பரங்கிக்காய்களுக்கு மவுசு அதிகம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT