Published : 09 Jan 2024 05:16 PM
Last Updated : 09 Jan 2024 05:16 PM

ஏற்றுமதி தடையோ பெருசுக்கு... பாதிப்போ சிறுசுக்கு! - வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கண்ணீர்

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்’’ என கிராமங்களில் கேலியாக சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ப பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படும் சின்ன வெங்காயம், சில்லறை விலையில் சந்தையில் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், இடைத்தரகர்களும் மொத்த வியாபாரிகளும்தான் அதிக லாபமடைகின்றனர். விவசாயிகளுக்கு நஷ்டம்தான். விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.35-க்கு விற்றால்தான் ஓரளவுக்கு கட்டுப் படியாகும். சின்ன வெங்காயம் விளைவிக்க ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம் 600 கிலோ தேவைப்படும்.

உழவு, தண்ணீர் பாய்ச்சுதல், உரம், களையெடுப்பு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை, தரம்பிரித்து விற்பனைக்கு தயார் செய்தல் ஆகிய பணிகளை செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை ஆகும். இதுபோக விதை வெங்காயம் வாங்குவதற்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகும்.

வெங்காய விலை அதிகரிக்கும் காலங்களில் விதை வெங்காயம் வாங்குவதற்கே 1 ஏக்கருக்கு ரூ.60,000 ஆகும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரை செலவாகிறது. அதே நேரம் ஒரு ஏக்கருக்கு 6 அல்லது 7 டன் அளவுக்கே மகசூல் கிடைக்கிறது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை.

அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும்
சின்ன வெங்காயம்.

தேவைக்கு அதிகமான அல்லது குறைவான மழை, நோய் தாக்குதல் ஆகியவற்றால் மகசூல் மேலும் குறைகிறது. இந்நிலையில் வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்திருப்பது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள்.

தனித்தனி குறியீட்டு எண் வழங்க வலியுறுத்தல்: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வீ.நீலகண்டன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது; சின்ன வெங்காயம் அண்மைக்காலமாக அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகம் உள்ளது. மேலும், பெரிய வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே குறியீட்டு எண்ணை மத்திய அரசு வைத்துள்ளது. பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்ததால், அதே குறியீட்டு எண் உள்ள சின்ன வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. உள்நாட்டு சந்தைக்கு தேவைக்கு அதிகமான வெங்காயம் வரத்து உள்ளதால், சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சின்ன வெங்காயத்தை தென் இந்திய மக்கள்தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். தென் இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்குத்தான் சின்ன வெங்காயம் ஏற்றுமதியாகிறது. எனவே, சின்ன வெங்காயத்துக்கு தனி குறியீட்டு எண் வழங்க வேண்டும். சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

மேலும், விலை அதிகரிக்கும் நாட்களில் பெரிய வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது. அதேபோல, சின்ன வெங்காயத்தையும் விலை வீழ்ச்சியடையும் நாட்களில் அரசே விவசாயிகளிடம் கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x