Published : 07 Jan 2024 04:59 PM
Last Updated : 07 Jan 2024 04:59 PM
சிவகாசி: சிவகாசியில் 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனை ரூ.350 கோடியை தாண்டியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசியில் சிறிய மற்றும் பெரிய அளவில் 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சீசன் அடிப்படையில் காலண்டர், டைரி, நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவீதம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன. கடந்த ஆடிப்பெருக்கு தினத்தில் 2024-ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.
மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு காலண்டர் விலை 5 சதவீதம் உயர்ந்தது. தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரிடம் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல வண்ண காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் தவிர்த்து ஜவுளி கடைகள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், வியாபாரிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் காலண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன.
2023-ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனை ரூ.400 கோடி வரை நடைபெற்ற நிலையில், தற்போது ரூ.350 கோடிக்கு மேல் காலண்டர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சியினர் கொடுத்த ஆர்டர்களுக்கான உற்பத்தி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையும் சேர்த்தால் இந்த ஆண்டும் ரூ.400 கோடியை தாண்டி காலண்டர் வர்த்தகம் நடைபெறும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான அளவு காலண்டர் ஆர்டர் வந்தது.
தொடர் மழை காரணமாக காலண்டர்களை உரிய நேரத்தில் தயார் செய்து அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழில் நிறுவனங்களுக்கான காலண்டர்கள் அனைத்தும் டெலிவரி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் காலண்டர்கள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மின் கட்டண உயர்வு காரணமாக 5 சதவீதம் விலை உயர்ந்த நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு 10 சதவீதம் வரை காலண்டர் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT