Published : 07 Jan 2024 04:06 AM
Last Updated : 07 Jan 2024 04:06 AM
திருவள்ளூர்: செங்குன்றம் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து வரும் நெல் வரத்து குறைந்ததால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அரிசி விலை உயர்ந்துள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலவாயல், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், சுமார் 55 நெல் மண்டிகளும், 40 அரிசி மண்டிகளும் செங்குன்றம் பகுதியில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் செங்குன்றம் பகுதிக்கு நாள் தோறும் ஆந்திராவில் இருந்து சுமார் நூறு லாரிகளில் நெல்வரத்து இருக்கும். அது தற்போது 50 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது என, அரிசி வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, செங்குன்றம் பகுதி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது: செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 டன் முதல் 50 டன் வரை அரிசி உற்பத்தி செய்யும் சுமார் 50 நவீன அரிசி ஆலைகளும், 8 டன் முதல் 10 டன் வரை அரிசி உற்பத்தி செய்யும் 50-க்கும் மேற்பட்ட சிறிய அரிசி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த அரிசி ஆலைகளுக்கு தேவையான நெல்லில் பெரும் பகுதி, ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து தான் வருகின்றன. நவரை, சொர்ணவாரி, சம்பா உள்ளிட்ட நெல் சாகுபடி காலங்களில், பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து நெல் வருவது வழக்கம்.
அவ்வாறு செங்குன்றம் பகுதிக்கு, தெனாலி, சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூர் உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து வரும் நெல், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாள்தோறும், தலா 25 முதல் 30 டன் வரை கொள்ளளவு கொண்ட 150 முதல் 200 வரையான லாரிகளில் வந்து கொண்டிருந்தது. பி.பி.டி என்கிற பாபட்லா பொன்னி, ஆர்.என்.ஆர். மற்றும் 16-38 என சன்ன ரகங்கள் வந்து கொண்டிருந்தன. ஆந்திர மாநிலத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரித்ததால், கடந்த 2 ஆண்டுகளாக படிப்படியாக வரத்து குறையத் தொடங்கியது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 100 லாரிகளில் வந்து கொண்டிருந்த நெல்வரத்து, தற்போது அது 50 லாரிகளாக குறைந்து விட்டது. ஆந்திர மாநில பகுதிகளில், நடப்பு சாகுபடி பருவத்துக்கான அறுவடை தற்போதுதான் தொடங்கியுள்ளது என்பதும், அவ்வாறு அறுவடை தொடங்கியுள்ள பகுதிகளிலும் மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் சற்று குறைந்துள்ளதும்தான் இதற்கு காரணம்.
அதே நேரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கான அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், நாள்தோறும் சுமார் 10 லாரி அளவுக்கு நெல் வரத் தொடங்கியுள்ளது. இந்த அளவு, தை மாதத்தில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆந்திராவில் இருந்து நெல் வரத்து வரும் 14-ம் தேதிக்கு பிறகு படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஆந்திராவிலிருந்து நெல் வரத்து குறைந்து விட்டதால், தற்போது அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், 26 கிலோ அடங்கிய அரிசி மூட்டை ஒன்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விற்பனையான விலையை விட ரூ.100 முதல், ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதனால், தற்போது மொத்த விலையில் பாபட்லா உள்ளிட்ட அரிசி ரகங்கள்( புதியது மற்றும் பழையது) 26 கிலோ அடங்கிய மூட்டை ரூ.1,150 முதல் ரூ.1,550 வரை என விற்பனையாகின்றன. அவை சில்லரை விலையில் குறைந்தபட்சமாக மூட்டைக்கு 1,250 முதல், ரூ.1,650 வரை விற்பனையாகின்றன.
விலை குறையாது. ஏன்?: இந்த விலை ஏற்றத்துக்கு நெல் வரத்து குறைவு மட்டும் காரணமல்ல, மின்சார கட்டணம் உயர்வுக்கு, நெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு, அரிசி ஆலை இயந்திரங்களின் உதிரி பாகங்கள், பேக்கிங் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவையும் காரணம். இதனால், ஆந்திராவில் இருந்து நெல் வரத்து அதிகரித்தாலும் அரிசி விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT