Published : 06 Jan 2024 03:09 PM
Last Updated : 06 Jan 2024 03:09 PM
சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் நிலவிவரும் சாரல் மற்றும் பனியினால் செடியிலே வெற்றிலைகள் அதிகளவில் கருகி வருகின்றன. மேலும், மார்கழியில் வெற்றிலை தேவை குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், முதியால் உள்ளிட்ட ரகங்கள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு விளையும் வெற்றிலைகள், புதுச்சேரி, மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த வெற்றிலைகள் செரிமானத்துக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, மாவட்டத்தில் சாரல் மழையுடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் கொடிக்காலில் உள்ள வெற்றிலைகள் வாடி சுருள்வதுடன், நிறமும் மாறி கருகி விடுகின்றன. இதனால் மகசூல் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்கழி என்பதால் திருமணம், கோயில் திருவிழாக்கள் குறைந்துள்ளன. சபரிமலை, பழநி போன்ற ஸ்தலங்களுக்கு பலரும் விரதமும் இருந்து வருகின்றனர். இதனால் வெற்றிலையின் தேவை வெகுவாய் குறைந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் வெற்றிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனையான வெற்றிலை, நேற்று ரூ.150ஆக குறைந்தது.
இதுகுறித்து மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி தங்கமுத்து கூறுகையில், வெற்றிலை மருத்துவகுணம் கொண்டது. இதன் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் உணரவில்லை. இதனால் வெற்றிலை விவசாயமும் குறைந்துவிட்டது.
இந்நிலையில், பனி, மழையினால் வெற்றிலைச் செடிகள் வாடிவிட்டன. தை மாதத்துக்குப் பிறகு தேவை அதிகரித்து, விலை உயரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT