Published : 05 Jan 2024 05:12 PM
Last Updated : 05 Jan 2024 05:12 PM

அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்திதாம்

புதுடெல்லி: அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இந்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி டிச.30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தை சர்வேதேச விமானநிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், முதன்மையான அயோத்தியின் பொருளாதார வளத்தை உணர்ந்தும், சர்வதேச ஆன்மீகத் தலம் என்ற அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் அயோத்தி விமான நிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படுகிறது.

ராமாயண காவியத்தை இயற்றிய மகரிஷி வால்மீகிக்கு புகழ்சேர்க்கும் வகையிலும், விமான நிலையத்தின் அடையாளத்துக்கு கலாசாரப் புகழ் அளிக்கும் வகையிலும் இந்த விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்திதாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அயோத்தியின் ஆழ்ந்த கலாசார வேர்கள், அந்த நகரம் முக்கியமான பொருளாதார முகமாகவும், புனித தலமாகவும் மாறும் நிலையைக் கொண்டிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம் சர்வதேச ஆன்மீக பயணங்கள் மற்றும் வணிகப் பயணங்களை ஈர்க்கும் தன்மையையும் இவ்விமான நிலையம் கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x