Published : 05 Jan 2024 04:47 PM
Last Updated : 05 Jan 2024 04:47 PM
மதுரை: நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தியில் மேற் கொள்ள வேண்டிய புதிய நடைமுறைகள், நச்சு இல்லாத விளைபொருட்களை விளைவிப்பதில் விவசாயிகளுக்கும், அவற்றை சந்தையில் விற்பனை செய்யும் உணவுப் பொருள் விற்பனை வியாபாரிகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இன்றைக்குப் பெரும் சவாலாக உள்ளன. விவசாயிகள் விளைபொருட்களைச் சாகுபடி செய்யும்போது உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வுகூட இல்லை.
காரணம், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதில்லை. மத்திய, மாநில வேளாண் அதிகாரிகள் அதிகளவில் பணியில் இருந்தும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்து நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுப்பியபோது காய்கறிகள், மசாலா பொருட்களில் அதிக நச்சுகள் இருப்பதாகக் கூறி அம்மாநில அரசு அவற்றை திருப்பி அனுப்பியது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிக நச்சு இருப்பதாக நம் அண்டை மாநிலமே கூறும்போது அதிக தரக் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிக்கும் வெளிநாடுகள், ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் உணவுப்பொருட்களை வாங்க மறுத்துவிடுகின்றன. இதனால், வேளாண் உணவுப்பொருட்கள் பெருமளவு ஏற்றுமதி ஆகவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வியாபாரிகளும் விற்பனை பாதிப்பால் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது: எந்தத் துறையிலும் இல்லாத உரிமம் பெறும் (பெர்மிட்) முறை இன்று வரை தமிழக வேளாண் துறையால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கணினி யுகத்துக்கு மாறி வரும் இந்த வேளையில் உரிமம் தேவையில்லை என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சந்தைக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்குச் சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தமிழகத்தில் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவு பயன்படுத்துவதால் இயல்பாகவே விளைபொருட்களில் அதிக நச்சுடன் அவை விளைகின்றன.
இதனால், அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்கள் அதிகளவு இருப்பதால் இந்த நிலையை மாற்ற வேளாண் துறை அதிகாரிகளை வைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும். நம் நாட்டில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில், பல நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களை வாங்க மறுக்கின்றன. இதற்குக் காரணம், அதில் உள்ள நச்சுத்தன்மையே. விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைத்து நாடுகளும் நம் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்.
அதனால், உணவுப் பொருட்களை பதப்படுத்தி பேக் செய்யும் தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகும். முன்பு அரபு நாடுகள் நம் நாட்டு ஏலக்காயை விரும்பி வாங்கின. பின்னர் அளவுக்கு அதிகமாக விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் தொடர்ந்து நம் நாட்டு ஏலக்காய்கள் வாங்குவதை நிறுத்திவிட்டன.
நறுமணப் பொருள் வாரியம் (ஸ்பைசஸ் போர்டு) மூலம் ஏலக்காய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் நம் நாட்டிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டால் அந்நியச் செலாவணி அதிகளவு கிடைக்க வாய்ப்புள்ளது.
நமது நாட்டில் விளைவிக்கப்படும் பொருட்களில் வேதிப்பொருட்கள் இயற்கையாகவே அதிகமாக உள்ளன. இந்த விளைபொருட்களை உருமாற்றி பொடியாக விற்கும்போது அதில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது என்று வணிகர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
ஆனால், வணிகர்கள் எந்தக் கலப்படமும் செய்வதில்லை. வேளாண் விளைபொருட்கள் சட்டம் தொடர்பாகவும், சந்தைக் கட்டணம் தொடர்பாகவும் விவாதிக்க எங்களைப் போன்ற சங்கங்களை மத்திய, மாநில அரசுகள் அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT