Published : 05 Jan 2024 03:16 PM
Last Updated : 05 Jan 2024 03:16 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை அடிவாரப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடியில் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வரை சிறுமலை மலைத் தொடர் நீண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை அடிவாரப்பகுதி கிராமங்களான வெள்ளோடு, கோம்பை, ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலி நகர், மெட்டூர், காமலாபுரம், செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிக பரப்பில் திராட்சை சாகுபடி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.
இருந்தபோதும் இயற்கை பாதிப்பால் சேதம், தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால் திராட்சை சாகுபடி ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாகக் குறைந்து வருகிறது. சிறுமலை அடிவாரத்தில் விளையும் திராட்சைகள் நல்ல சுவையாக இருப்பதால் வரவேற்பு உள்ளது. இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகம் காரணமாக கொடியில் காய்த்துள்ள திராட்சை பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பழங்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதுகுறித்து கோம்பை கிராம திராட்சை சாகுபடி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுக்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்கிறோம். கவாத்துவெட்டி கொடியைப் பராமரித்து திராட்சை பழங்கள் கொடியில் தொங்கும்போது பறவைகள் வந்துவிடுகின்றன.
பறவைகளிடம் இருந்து பழங்களைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியுள்ளது. மழைக் காலத்தில் அதிக மழை பெய்தால் பழங்களில் நீர்கோர்த்து கொடியிலேயே அழுகி விடுகின்றன அல்லது பழம் சேதமடைந்துவிடுகிறது.
தற்போது பனிக்காலத்தில் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு திராட்சை பழங்கள் கொடியில் இருந்து உதிர்ந்து விழுகின்றன. இதனால் தரமான பழங்களை அறுவடை செய்ய முடியாததால் விற்பனைக்கு அனுப்பமுடியாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திராட்சை விவசாயிகளுக்கு இழப்பைத் தவிர்க்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment