Published : 24 Apr 2014 11:18 AM
Last Updated : 24 Apr 2014 11:18 AM
பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜும்தார்ஷா, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். கடந்த வாரம் இன்ஃபோசிஸ் நிறுவன இயக்குநர் குழு கூட்டத்தில் ரோஹன் மூர்த்தியின் செயல்பாடுகளைப் புகழ்ந்து ட்விட்டரில் இவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை, ரோஹன் மூர்த்தியின் செயல்பாடு தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அவர் மூலம் இன்ஃபோசிஸ் மிகப் பெரும் பயன் அடையப் போகிறது என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தொழில்துறையைச் சேர்ந்த பலரும் நிறுவனத் தலைவரின் செயல் உதவியாளர் இவ்விதம் திறமையாக இருப்பதில் வியப்பேதும் இல்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் இயக்குநர் குழுவில் நடந்த விஷயங்களை பொதுப்படையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ட்விட்டரில் கிரண் மஜும்தார் கருத்து வெளியிட்டது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தனர். கிரண் மஜும்தாரின் கருத்தை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கிரண் மஜும்தார் குறிப்பிட்டுள்ளார். தனது செயல் தவறானது என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் புதன்கிழமை ட்விட்டரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ரோஹன் மூர்த்தி, நிறுவனத் தலைவரின் செயல் உதவி யாளராக சேர்ந்தபோது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களின் வாரிசுகள் யாரும் நிறுவனத்திற்குள் நுழைய மாட்டார்கள் என நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தி ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் அதை அவரே மீறியுள்ளார் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மிகச் சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது, இந்த நடைமுறையால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இருப்பினும் நாராயணமூர்த்தியின் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும்போது, அவரது மகனான ரோஹன் மூர்த்தியும் நிறுவனத் திலிருந்து வெளியேறிவிடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது நடைபெறும் விஷயங்களைப் பார்க்கும்போது ரோஹன் மூர்த்தி நிறுவனத்தில் நீண்டகாலம் இருப்பார் என்றே தோன்றுவதாக பலர் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT