Published : 03 Jan 2024 06:35 PM
Last Updated : 03 Jan 2024 06:35 PM
புதுடெல்லி: அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும், செபி அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தச் சூழலில் வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பின் விவரம்:
தீர்ப்புக்கு அதானி வரவேற்பு: "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கான எங்களின் பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளார் அதானி.
வழக்கின் பின்னணி: கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டது என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டது. இதனால், பெரும் இழப்பை எதிர்கொண்டது அதானி குழுமம்.
இதன் தொடர்ச்சியாக, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது சில ஊடக அறிக்கைகளுக்காக செபியின் விசாரணையை சந்தேகப்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் குறித்தும் கேள்வி எழுப்பியது. இதனிடையே, விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லை என செபி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அதானி விவகாரத்தில் செபி எந்தவித குற்றச்சாட்டையும் தெரிவிக்காத நிலையில், பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அதன் காரணமாக அதானி பங்குகளின் விலை அன்று ஒரே நாளில் 15 பில்லியன் டாலர், அதாவது ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஏற்றம் கண்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT