Published : 26 Dec 2023 06:15 AM
Last Updated : 26 Dec 2023 06:15 AM
புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல ரூ.16 ஆயிரம் கோடிக்கு தளவாட ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகுஉள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதில் சுயசார்பு அடையமத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக, எல்லை உள்கட்டமைப்பை பலப்படுத்துதல், பெண் சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனை உறுதி செய்தல் ஆகியவை பாதுகாப்பு அமைச்சக செயல்பாட்டின் மையமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது, குறிப்பாக, தொழில் தொடங்குவதை எளிதாக்கவும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஒருங்கிணைப்பதற்காகவும் மத்திய அரசுபல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2022-23 நிதியாண்டில் நாட்டின் ராணுவதளவாட உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிஉள்ளது. இது முந்தைய நிதியாண்டில் (2021-22) ரூ.95 ஆயிரம் கோடியாக இருந்தது.
10 மடங்கு அதிகம்: இதுபோல 2022-23 நிதியாண்டில் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.16 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.3 ஆயிரம் கோடிஅதிகம் ஆகும். கடந்த 2016-17நிதியாண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிட 10 மடங்கு அதிகரித்துள்ளது. 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.
டார்னியர்-228, 155 எம்.எம். நவீன துப்பாக்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணை சிஸ்டம், ராடார்கள், கவச வாகனங்கள், பினாகா ராக்கெட்-லாஞ்சர்கள் மற்றும் சிமுலேட்டர்கள் உள்ளிட்டவற்றை சுமார் 100 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.
குறிப்பாக, எல்சிஏ-தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், விமானம்தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்ட இந்திய தயாரிப்புகளுக்கான தேவை உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT