Published : 23 Dec 2023 06:08 AM
Last Updated : 23 Dec 2023 06:08 AM
புதுடெல்லி: வரிப் பகிர்வின் கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடி நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புத்தாண்டு, வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மாநிலங்கள் மேற்கொள்ள ரூ.72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
தற்போது மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகை 10 ஜனவரி 2024 அன்று மாநிலங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிப் பகிர்வு ஆகும். 11 டிசம்பர் 2023 அன்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.72,961.21 கோடி வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.13,088.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிஹார் மாநிலத்துக்கு ரூ.7,338.44 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.5,488.88 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவுக்கு ரூ.2,952.74 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.2,660.88 கோடியும், சத்தீஸ்ருக்கு ரூ.2,485.79 கோடியும், ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ.2,412.83 கோடியும், அஸ்ஸாமுக்கு ரூ.2,282.24 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.1,533.64 கோடியும், கேரளத்துக்கு ரூ. 1,404.50 கோடியும் வரி பகிர்வின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT