Published : 22 Dec 2023 01:53 PM
Last Updated : 22 Dec 2023 01:53 PM

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழை, நெல் போன்ற பயிர்களை மீட்டெடுக்கலாம்: வேளாண் பொறியாளர் விளக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட வாழை, நெல், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழை,நெல் போன்ற பயிர்களை இயற்கை முறையில் மீட்டெடுக்கும் முயற்சிகளை, வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: வெள்ளத்தால் கடந்த 5 நாட்களாக முழுமையாக அல்லது பாதி அளவில் மூழ்கியுள்ள மணல் மற்றும் சரளை மண் உள்ள நிலங்களில் தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. அதே வேளையில், களி மண் உள்ள நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இச்சூழ்நிலையில் வேர்களை அழுகல் நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும், பயிர்களை மீட்டெடுக்கவும் எந்த வகை பயிருக்கும், ஓர் ஏக்கருக்கு 1 லிட்டர் டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் ஒரு லிட்டர் பாசிலோ மைசீஸ் என்ற உயிரியல் திரவங்களை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலம் முழுவதும் படுமாறு ஈர மண்ணில் ஊற்றிவிடலாம்.

12 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு தரை வழியாக ஊற்றி விடுவதால், பயிர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும். களி மண் நிலங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருந்தால்கூட, இந்த திரவங்களை மண்ணில் ஊற்றி விடுவதால் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், சூடோமோனாஸ் அல்லது பேசிலஸ் சப்ஸ்டில்ஸ் போன்ற உயிர் திரவங்களை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பான் மூலம் பயிர்கள் மீது தெளித்து விடலாம். இரண்டு திரவங்களும் கிடைக்கும் பட்சத்தில், 10 லிட்டர் தண்ணீரில் தலா 50 மில்லி கலந்து பயிர்கள் மீது வாரம் ஒருமுறை என இரண்டு முறை தெளிக்கலாம்.

மேலும், இனிவரும் காலங்களில் எளிதாக கிடைக்கும் குறைந்த விலை கரைசல்களான இஎம் கரைசல், வேஸ்ட் டி காம்போசர், மீன் அமிலம் போன்ற திரவங்களை குறுகிய காலத்தில் பெருக்கம் மற்றும் உற்பத்தி செய்து, பயிர்களுக்கு தரை வழியாகவும், தெளிப்பாகவும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

அப்போது, மண்ணில் படிந்துள்ள கழிவுப் பொருட்களின் பாதிப்பை மாற்றியும், நிலம் வழியாக சத்துகளை அதிகரித்தும் மற்றும் இலை வழியாக உணவு தயாரிக்கும் செயல்பாட்டை அதிகரித்தும் பயிர்களை மீட்டு எடுக்கலாம் என்று கூறினார். இது போன்ற உயிரியல் திரவங்கள் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்கும். மேலும், இவற்றை உபயோகப்படுத்துவது குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களிடம் விவரம் பெற்று பயன்படுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x