Published : 21 Dec 2023 01:51 PM
Last Updated : 21 Dec 2023 01:51 PM
ஓசூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் பகுதியிலிருந்து 30 லட்சம் வெள்ளை ரோஜாவைக் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்ப விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன.
குறிப்பாக கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது, அம்மாநில மக்கள் வெள்ளை சாமந்திப் பூவை அதிகம் விரும்புவதால், ஓணம் பண்டிகை வர்த்தகத்தை மையமாகக் கொண்டு ஓசூர் பகுதியில் அதிக அளவில் வெள்ளை சாமந்திப்பூ சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 1,000 டன்னுக்கு மேல் விற்பனைக்குச் செல்கின்றன.
இதேபோல, கிறிஸ்துமஸ் மற்றும் கிறிஸ்தவ மக்களின் திருமண விழாவுக்காக கேரள மாநில மக்கள் வெள்ளை ரோ ஜாவை விரும்புவதால், ஓசூர் பகுதியில் வெள்ளை ரோஜா அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன். இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெள்ளை ரோஜா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அறுவடை செய்யப்பட்ட மலர்கள் கட்டுகளாகக் கட்டப் பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்க குளிர் பதனக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாகலூரைச் சேர்ந்த விவசாயி ஹரீஸ் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேரள மாநில வர்த்தகத்தை மையமாக கொண்டு ஓசூர் பகுதியில் பசுமைக் குடில் மூலம் சுமார் 500 ஏக்கரில் வெள்ளை ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வாழும் கேரளா மாநில கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உள்ளூர் வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மறுநாள் (டிச.26) முதல் ஜன.10-ம் தேதி வரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும்.
இதனால், கேரள மாநில மலர் சந்தைகளில் வெள்ளை ரோஜாவின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக கேரளா வியாபாரிகள் ஓசூர் பகுதி விவசாயிகளிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்தாண்டு 30 லட்சம் வெள்ளை ரோஜாவை கேரளாவுக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளோம். இதற்காக வெள்ளை ரோஜா மற்றும் மேடை அலங்காரத்துக்கான வெள்ளை ஜாபரா, பூங்கொத்துக்காக வெள்ளை ஜிப்சோபிலா ஆகிய மலர்களின் அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது.
மேலும், அறுவடை செய்யப்பட்ட மலர்கள் கவர்களில் பேக் செய்யப்பட்ட குளிர் பதன அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. இம்மலர்கள் வரும் 23-ம் தேதி முதல் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். உள்ளூர் சந்தையில் 20 மலர் கொண்ட கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கேரளாவில் ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT