Last Updated : 20 Dec, 2023 03:26 PM

1  

Published : 20 Dec 2023 03:26 PM
Last Updated : 20 Dec 2023 03:26 PM

3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வேளாண் சுற்றுலா சென்ற உடுமலை விவசாயிகள்.

உடுமலை: அதிகளவு இயற்கை விவசாயத்தை கையாளும் பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகள் இந்திய விவசாயிகளைவிட 3 மடங்கு லாபம் ஈட்டி வருவதாக அங்கு கள ஆய்வுக்காக சென்று திரும்பிய உடுமலை விவசாயிகள் தெரிவித்தனர். உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னைசாகுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசின், தோட்டக்கலைத்துறை சார்பில் மலேசியா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு 100 முன்னோடி விவசாயிகளை அழைத்துச் சென்று தொழில் முனைவோராக்கும் பயிற்சி திட்டத்துக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 விவசாயிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.அந்நாட்டில் பின்பற்றப்படும் விவசாய சாகுபடி முறை, உரம், பூச்சி மருந்து பயன்பாடு, விற்பனை, ஆராய்ச்சி போன்ற விவரங்களை அந்நாட்டு விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தெரிந்து கொண்டனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சென்று திரும்பிய உடுமலையை அடுத்த பூளவாடியைச் சேர்ந்த சி.மவுனகுருசாமி கூறியதாவது: உலக அளவில் இயற்கை விவசாயத்தை பின்பற்றும் நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதன்மையாக உள்ளது.அங்கு சராசரியாக ஒரு தேங்காயின் எடை ஒன்றரை கிலோவாக உள்ளது. அந்நாடு நீர் வளம் மிக்கதாகஉள்ளதால், இந்தியாவைப்போல சொட்டுநீர் பயன்பாடும், அதற்கான தேவையும் இல்லை.அங்கு அதிகளவுஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தென்னையில் இருந்து வினிகர், நீரா உற்பத்தி அதிகமாக உள்ளது. வினிகர் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் அந்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழக விவசாயிகளும் வினிகர் தயாரிப்பில் ஈடுபடுவது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும். அதேபோல அங்கு விர்ஜின் ஆயில் ஒரு லிட்டர் ரூ.350-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் இந்த ஆயில்ஒரு லிட்டர் ரூ. 500-க்கு விற்பனையாகிறது. உற்பத்தியின் அளவும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

பிலிப்பைன்ஸில் 7000-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அதில் தென்னை, வாழை, பப்பாளி, நெல், அன்னாசி அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.உலக நெல் ஆராய்ச்சி நிலையமும் அங்கு சிறப்பாக செயல்படுகிறது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உட்பட உலகின் 1.5 லட்சம் வகையான நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டு, பிலிப்பைன்ஸில் பிரதமர் நரேந்திரமோடி பெயரில் பிரத்யேக நெல் ஆராய்ச்சிக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல வாழை ஆராய்ச்சி நிலையமும் இயங்கி வருகிறது. அந்நாட்டில், 30-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் பயிரிடப்பட்டுள்ளன. அன்னாசி பழத்துக்கென தனி ஆராய்ச்சி நிலையமும், அதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட அன்னாசி வகையும் சாகுபடி செய்யப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தயிர் தேங்காய்.

அதேபோல பழரசத்துக்காக பயன்படுத்தும் வகையில் புதிய வகை எலுமிச்சை, மா சாகுபடியும் அதிகளவு உள்ளது. ஏராளமான தனியார் நிறுவனங்கள் மாங்கூழ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிகளவு மா வகைகளை கொண்ட இந்திய மாம்பழங்களின் இனிப்பு சுவையைவிட பிலிப்பைன்ஸ் மாம்பழங்களின் சுவை குறைவாகவே இருந்தது. பல ஆண்டுகளாகவே ரசாயன உர பயன்பாடு குறைவாகவும், இயற்கை உர பயன்பாடு அதிகமாகவும் பின்பற்றப்படுகிறது. இதனால் இந்தியாவைவிட அந்நாட்டு விவசாயிகளின் வருவாய் 3 மடங்கு அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிகாட்டுகின்றன. அதற்கு விவசாயிகளும் தயாராக வேண்டும். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன, என்றார்.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தோட்டக்கலை அலுவலர் சுகன்யா கூறியதாவது: பிலிப்பைன்ஸில் வாரத்துக்கு 100 மி.மீ. மழை பெய்வதாக அந்நாட்டு விவசாயிகள் தெரிவித்தனர். அதனால் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்போ அல்லது சொட்டுநீர் பாசன அமைப்புகளோ இல்லை. 70 சதவீதம் இயற்கை விவசாயம் மட்டுமே அங்குள்ளது. இந்தியாவைப்போல தென்னையை தாக்கும் நோய் கிடையாது. அறுவடைக்குப்பின் சார்ந்த தொழில்நுட்பம் அங்கு வலுவாக உள்ளது. இதை தெரிந்து கொள்ளும் வகையில்தான் 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் எலுமிச்சை பழத்தில் இருந்து ஜூஸ் எடுத்து அதனை பவுடராக மாற்றிடும் முறையை நேரில் காண முடிந்தது.

உலகின் அனைத்து நாடுகளின் பயிர் வகைகளும் பிலிப்பைன்ஸில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை போர் நிகழ்ந்து ஏதேனும் ஒரு நாட்டின் பாரம்பரிய ரகங்கள் அழிய நேரிட்டாலும், அந்த நாட்டின் பயிர் ரகங்களை பிலிப்பைன்ஸ் பாதுகாத்து தரும் பணியை செய்து வருகிறது. பழத்தை பழமாக வைத்தால் விரைவில் கெட்டுவிடும். அதையே பவுடராக்கி வைத்தால் நீண்டகாலம் பயன்படுத்தலாம். தயிர் தேங்காய் என்ற ரகம் அங்கு பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக பருமன் கொண்ட அந்த தேங்காயில் தண்ணீரே இருக்காது. பருப்பும் இருக்காது. இரண்டும் கலந்த கலவைபோல இருக்கும். இவை அதிகமாக பேக்கரி பொருள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுகின்றன, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x