Published : 11 Dec 2023 04:38 PM
Last Updated : 11 Dec 2023 04:38 PM

ஜவுளித் தொழிலில் தொடரும் வங்கதேச அசுர வளர்ச்சியும், இந்தியாவின் நிலையற்ற சூழலும்!

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

திருப்பூர்: ஜவுளித் தொழிலில் வரலாறு காணாத வளர்ச்சியை சமீப காலமாக வங்கதேசம் எட்டியுள்ளது. அந்நாட்டின் 85 சதவீதம் பேர், ஜவுளித்தொழிலை நம்பியிருக்கும் அளவுக்கு, கிராமங்கள் மற்றும் நகரங்களில் இந்த தொழில் சகல திசைகளிலும் விரிவடைந்துள்ளது. பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள வங்கதேச தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டத்தை முன்னெடுத்தனர். நவம்பர் மாதம் போராட்டம்உச்சத்தை தொட்டபோது, அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் போராட்டத்தால் வங்கதேச வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று பலரும் தொழில்துறையில் ஆருடங்கள் சொல்ல தொடங்கினர். ஆனால் இங்குள்ள மனிதவளம், ஆற்றல், வசதிகள் உள்ளிட்டவற்றை ஒருநாளும் வங்கதேசம் எட்ட முடியாது என்பதால், அந்த வாய்ப்புகள் இங்கு வரும் என்பது வெறும் கனவாகவே மட்டுமே முடியும், என்கின்றனர்.

இதுதொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: வங்கதேச நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு முக்கிய அங்கமாகவும், முதன்மை தொழிலாகவும் ஜவுளித் தொழில் இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் அளவுதான் அங்கு ஒட்டுமொத்த நாடும். ஆனால், பரந்து விரிந்து கிடக்கும் இந்தியாவை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக ஜவுளி உற்பத்தி செய்கிறார்கள். உலக அளவில் ஆடை உற்பத்தியில் வங்கதேசம் 12 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. ஆனால், 142 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பங்களிப்பு வெறும் 3.8 சதவீதம்தான். அதிகமான வேலை வாய்ப்பை வழங்குவதை வங்கதேசம் சரியாக புரிந்துகொண்டு, அங்கு ஜவுளித்தொழிலை மேம்படுத்தியுள்ளது.

அந்த நாட்டில் தேர்தல் வருவதால், ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து, 50 சதவீதம் கூலி உயர்வும் பெற்றுள்ளனர். எதிர்கட்சிகள், ஆளும்கட்சிகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அங்கு அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தயாராக உள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் எல்லாம் வங்கதேசத்தை நாடுகின்றன. ஜவுளி உற்பத்தி என்பது வியாபாரம் மற்றும் லாப நோக்கில் செய்வதுதான். எங்குவிலை குறைவாக இருக்குமோ, அங்கு வியாபாரம்இருக்கும். இந்தியாவை காட்டிலும் வங்கதேசத்தில் விலை குறைவு என்பதால், பையர்கள் அங்கு செல்கிறார்கள். பின்தங்கிய நாடு என்பதால் வங்கதேசத்தில் துணி இறக்குமதி செய்யப்படுவதற்கு வரி இல்லை. பையர்களுக்கு அதிக லாபம், இப்படி பல சலுகைகள் இருப்பதால், அனைவரும் அங்கு தேடி ஓடுகின்றனர்.

இந்தியாவில் தொழில் செய்யும்போது வரி விதிப்பு, தொழிலாளர்கள் சம்பளம், தயாரிப்பு செலவு உள்ளிட்டவை, நிலையற்ற மூலப்பொருட்கள் விலை என பல்வேறு இடையூறுகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக 3 சதவீதத்தில்தான் இருக்கிறோம். பெரிய முன்னேற்றம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் யாராக இருந்தாலும் ஜவுளித்தொழிலை கண்டுகொள்ளவில்லை. அரசும், கார்ப்பரேட்களும் நெருக்கமாக இருப்பதால், இந்தியாவில் கார்ப்பரேட்களுக்கு தேவையான தொழில்தான் வளர்த்தெடுக்கப்படுகிறது. அதேசமயம், மக்களுக்கு அதிகம் பயன்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களான ஜவுளி உள்ளிட்டவை நசுக்கப்படுகின்றன.

இந்தியாவில் திட்டங்கள் இருக்கும், ஆனால் செயல்பாட்டுக்கு வருவதில்லை. இதுதான் மற்ற நாடுகளுடன் நமக்கு இருக்கும் பிரச்சினை. தொழில்துறையின் உண்மையான கோரிக்கையை அரசுக்கு தொழில் அமைப்புகள் தெரியப்படுத்தும்போதுதான் தொழில் வளம்பெறும். இல்லையென்றால், தொழில் மேலும் மோசமாகும். ஓர் அரசின் ஆயுள்காலம் 60 மாதம்தான். ஆனால், தொழில் வளர்ச்சி அடைந்தால், ஆயுள் காலம் மட்டுமின்றி அவர்களது சந்ததிகள் மற்றும் அதன்மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு சங்கிலிகள் பின்னிப்பிணைந்துள்ளன. நாடும், தொழிலும் வளம்பெற ஆட்சியில் இருப்பவர்கள்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x