Published : 07 Dec 2023 09:35 AM
Last Updated : 07 Dec 2023 09:35 AM
கோவை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் நூற்பாலைகள், குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் கூட போட்டியிட முடியாத சூழல் உள்ளதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘சைமா’ தலைவர் எஸ்.கே.சுந்தர ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்டவை நாட்டின் நூற்புத்திறனில் 55 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, தேவை வெகுவாக குறைந்துள்ளது ஆகிய காரணங்களால் கடந்த 18 மாதங்களாக நூற்பு தொழில் சுணக்க நிலையில் உள்ளது. பருத்திக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரி, செயற்கை பஞ்சு மற்றும் இழை நூல்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
பருத்தி நூல் ஏற்றுமதி கடந்த 2021 - 2022-ம் நிதியாண்டில் 1,304 மில்லியன் கிலோ என இருந்த நிலையில் 2023-24ல் ( ஏப்ரல் முதல் செப்டம்பர் 2023 வரை ) 56 சதவீதம் குறைந்துள்ளது. அபரிமிதமான மின் கட்டண உயர்வு, யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.2.50 வரை அதிகபட்ச கேட்பு கட்டணம், உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு ரூ.350-லிருந்து ரூ.562-ஆக உயர்த்தியது, குறைந்த அழுத்த மின் இணைப்புகளுக்கு நிலைக் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.35-லிருந்து ரூ.77.56 ஆக உயர்த்தியது, அனைத்து இணைப்புகளுக்கும் உச்ச பயன்பாட்டு நேர உபயோகத்திற்கு 25 சதவீத கட்டணம் விதிப்பு போன்றவற்றால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகளவிலான போட்டித்திறனை பாதிப்பதோடு, உள்நாட்டில் மஹாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் அங்குள்ள ஜவுளி ஆலைகளுக்கு அறிவித்துள்ள ஊக்க தொகைகளால், தென்னக மாநிலங்களில் உள்ள நூற்பாலை தொழில் முனைவோர் அவர்களோடு போட்டியிட முடிவதில்லை. நீண்ட காலமாக தொடரும் உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சமீபத்திய போர், செயற்கை பஞ்சுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு சட்டம் போன்றவைகள் பல்வேறு நாடுகளில் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் செயல்படும் நூற்பாலைகள் தேவை குறைந்த காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சீனா, வங்க தேசம், வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, துணிகள், ஆடைகள், படுக்கை விரிப்புகள் இறக்குமதி அதிகரிப்பு, உள்நாட்டில் தரமான உற்பத்தியை மேம்படுத்தி வியாபாரத்தின் அளவினை 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த வேண்டும் என்ற அரசின் முக்கிய திட்டங்களின் நோக்கத்தை பாதிக்கிறது.
கூடுதல் நீண்ட இழை பருத்தி ( அமெரிக்க பிமா மற்றும் எகிப்தின் கிஸா ) மற்றும் சிறப்பு செயற்கை இழைகள் ஆகிய இரண்டையும் எந்த தடையுமின்றி இறக்குமதி செய்ய அனுமதிப்பது சர்வதேச சந்தையில் நமது பங்கை பெறுவதற்கு உதவும். ஜவுளித் தொழில் சார்ந்த அனைத்து தொழில் அமைப்பினரும் பங்கேற்ற மெய்நிகர் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து சங்கங்களின் தலைவர்களும், சமீப ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மின் கட்டண உயர்வை ஓராண்டு காலத்திற்கு தமிழக, ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மத்திய அரசு முதன்மை கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் இருந்து ஒரு வருட காலம் விலக்களிக்க வேண்டும். மூன்று வருட கரோனா கால கடனை 6 வருட கடனாக மறு சீரமைக்க வேண்டும். நடப்பு மூலதனத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை நீக்க தகுந்த பொருளாதார உதவிகளை பயனாளிகள் அடிப்படையில் வழங்க வேண்டும். பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப் படாத பஞ்சு மற்றும் ஜவுளி இழைகளுக்கு விலக்களித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
தென்னிந்திய நூற்பாலைகள் ஒரு வாரத்துக்கு ஆலைகளை நிறுத்தி வைப்பது, இந்தியாவில் உள்ள அனைத்து நூற்பாலைகளையும் 35 சதவீதம் குறைந்த திறனுடனோ அல்லது நாள் ஒன்றுக்கு ஒரு ஷிப்ட் ஆலையை நிறுத்தி வைத்தோ இயக்குமாறு பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT