Published : 06 Dec 2023 08:55 AM
Last Updated : 06 Dec 2023 08:55 AM

ராணுவ தளவாட தயாரிப்பில் முன்னணி வகிக்கும் உலகின் முதல் 100 நிறுவனங்களில் எச்ஏஎல், பெல், மசகான் நிறுவனங்கள் இடம்பெற்றன

புதுடெல்லி: ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2022-ம் ஆண்டில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் முதல் 100 நிறுவனங்களின் மொத்த விற்பனை 597 பில்லியன் டாலரை எட்டியது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பதற்றம் அதிகரித்து உலகம் முழுவதும் ஆயுத தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்), மசகான் டாக்ஸ் (எம்டிஎஸ்) ஆகியவை உலகின் முதன் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்களாக உள்ளன. முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் எச்ஏஎல் நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் விற்பனை மதிப்புடன் 41-வது இடத்திலும், பெல் நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் மதிப்பில் 63-வது இடத்திலும், எம்டிஎல் நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 89-வது இடத்திலும் உள்ளன. ஆனால் இந்த 3 நிறுவனங்களின் மொத்த விற்பனை, கடந்த ஆண்டு மொத்த விற்பனையில் ஒரு சதவீதம்தான். வரும் காலங்களில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் எனகூறப்படுகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மட்டும் கடந்த வாரத்தில் ரூ.1.8 லட்சம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 97 தேஜஸ் விமானங்கள், 156 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள், 84 சுகாய் விமானங்களின் மேம்பாடு ஆகியவையும் அடங்கும்.

ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர் வருகிறது. ஆனால் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு, தளவாட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

ராணுவத்துக்கு செலவு செய்வதில் இந்தியா, நான்காவது பெரிய நாடாக உள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 877 பில்லியன் டாலரும், சீனா 292 பில்லியன் டாலரும், ரஷ்யா 86.4 பில்லியன் டலரும், இந்தியா 81.4 பில்லியன் டாலரும் செலவு செய்கின்றன. இவ்வாறு எஸ்ஐபிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x