Published : 05 Dec 2023 03:59 AM
Last Updated : 05 Dec 2023 03:59 AM

சிறு தானியங்களில் 50 வகையான உணவுகள்: அசத்தும் மதுரை பெண் தொழில்முனைவோர்

சரோஜினியை பாராட்டிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: சிறுதானிய உணவுகளைப் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் லட்டு, புட்டு, சூப் என பல்வேறு வகையான உணவு வகைகளைத் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த தொழில்முனைவோரான சரோஜினி (46). இது குறித்து சிறுதானிய உணவு வகை தயாரிப்பாளரும், பயிற்சியாளருமான சரோஜினி கூறியதாவது: தனியார் பள்ளியில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, பேப்பர் கிராப்ட் மற்றும் எழுத்துப் பயிற்சி ஆகியவற்றை கடந்த 12 ஆண்டுகளாக அளித்து வந்தேன். கரோனா காலத்தில் வேலையின்றி இருந்ததால், மாற்றுத் தொழில் செய்ய முயற்சித்தேன். அப்போது, ஆன்லைன் மூலம் சிறுதானியப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியைக் கற்றேன்.

சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட லட்டு வகைகள்

சிறுதானிய உணவு வகைகளை, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தம்பிக்கும், அவரது மகளுக்கும் கொடுத்தேன். சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறியதால் அவர்களது உடல்நிலை சீரானது. பின்னர், வருமானத்துக்காக சிறுதானியங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்சத்தான உணவை உண்டு பள்ளிக்குச் செல்ல சிறுதானிய உணவுகளை வித விதமாகத் தயாரித்து வழங்குகிறோம்.

தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அரங்குகள் அமைத்து விற்பனை செய்து வருகிறோம். மேலும், ‘மாப்பிள்ளை செல்வதானியம்’ என்ற பெயரில் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதோடு, விற்பனையும் செய்து வருகிறோம். வீட்டிலிருந்து மொபைல் போனில் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறோம். சுமார் 900 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதில் 500 பேர் சிறுதானிய உணவு வகைகள் தயார் செய்து விற்பனையாளராகவும் மாறியுள்ளனர். வெளிநாட்டில் உள்ளோருக்கும் பயிற்சி அளிக்கிறோம். சிறு தானியங்களில் 50 வகையான உணவுகள், 35 வகையான லட்டுகள், 10 வகையான சூப் மற்றும் புட்டு, இடியாப்பம் உற்பத்தி செய்து தருகிறோம்.

அனைவரும் சிறு தானிய உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். இதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் 25 விருதுகள் பெற்றுள்ளேன். மேலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டினார். இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x