Published : 01 Dec 2023 02:51 PM
Last Updated : 01 Dec 2023 02:51 PM
புதுடெல்லி: ரூ.9760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது மக்களிடம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வந்தனர். இதையடுத்து, அக்டோபர் 7-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டித்தது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்: ரூ.9760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது மாற்றப்படவில்லை. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 97.26 சதவீத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் ரூ. 9760 கோடி மதிப்பிலான, அதாவது 2.7 சதவீதம் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும், அவற்றை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் அவை உரிய முறையில் டெபாசிட் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
கெடு முடிந்த பின்னரும் கூட 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற விரும்புபவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களையும் அணுகலாம் எனவும், இந்திய அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி மே 19 முதல் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT