Published : 01 Dec 2023 04:02 AM
Last Updated : 01 Dec 2023 04:02 AM

"எல்ஐசி ஜீவன் உத்சவ்" புதிய திட்டம் அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன?

சென்னை அண்ணா நகரில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் தொலைக்காட்சி நடிகை சபிதா ஆனந்த் குத்துவிளக்கு ஏற்ற, முதுநிலை கோட்ட மேலாளர் ஜி.குமார் `எல்ஐசி ஜீவன் உத்சவ்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் `எல்ஐசி ஜீவன் உத்சவ்' எனும் புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்ஐசி ஜீவன் உத்சவ் என்பது ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது உள்ளவர்கள் வரை பயன்பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு உண்டு. குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகளாகவும் அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 16 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீரான வருமான பலனைத் தேர்வு செய்தால் ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஒத்திவைப்பு காலமான 3 முதல் 6 ஆண்டுகள் கழித்து அடிப்படை ஆயுள் காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும். விருப்ப வருமான பலனைத் தேர்வு செய்தால் ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் வழங்கப்படும் 10 சதவீத ஆயுள் காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெறாமல், அதை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 5.5 சதவீத ஆண்டு கூட்டு வட்டி கிடைக்கும்.

காப்பீடு தொடங்கப்பட்ட பிறகு பாலிசி நடப்பில் இருந்தால், பாலிசிதாரர் இறப்பின் போது இறப்பு காப்பீட்டுத் தொகை சேர்ந்துள்ள உறுதியளிப்புத் தொகையுடன் அளிக்கப்படும். இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105 சதவீதத்துக்குக் குறையாமல் இறப்பு பலன் கிடைக்கும். அடிப்படை காப்பீட்டுத் தொகை அல்லது ஆண்டு பிரீமியத்தின் 7 மடங்கு இதில் எது அதிகமோ அது இறப்புக் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x