Published : 30 Nov 2023 05:13 PM
Last Updated : 30 Nov 2023 05:13 PM

ஓசூரின் 30 கிராமங்களில் 300 விவசாயிகள் பலன் பெறும் திட்டம்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தகவல்

ஓசூர்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூகநல செயல்பாட்டுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்டின் பால் கொள்முதல் திட்டத்தின் மூலம் ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ.13 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) மற்றும் சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் (Sundaram-Clayton Limited) ஆகியவற்றின் சமூக நல செயல்பாட்டுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST), கிராமப்புற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சுயஉதவி குழுக்களை உருவாக்கி, அந்த சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளுக்கான இணைப்பு வசதியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புற பெண்களுக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

ஏறக்குறைய 11,000 பெண்கள் கால்நடைகள் மூலம் தங்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த மாபெரும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் தங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு முழுமையான கால்நடை வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறாக பயிற்சி பெறும் பணியாளர்கள் இப்பகுதிகளிலுள்ள கிராமப்புற பெண்களுக்கு தங்களது கால்நடைகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்து எடுத்துரைத்து வருகிறார்கள்.

இத்திட்டத்தின் விரிவாக்க முயற்சியாக, சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட், திருப்பதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பெண்களே நிர்வகிக்கும் பால் உற்பத்தி நிறுவனமான, ஸ்ரீஜா மகிளா மில்க் ப்ரொடியூஸர் கம்பெனி லிமிடெட் உடனான கூட்டு செயல்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த கூட்டு செயல்பாட்டின் முதன்மையான நோக்கம், பால் பண்ணையாளர்களின் நல்வாழ்வு மற்றும் பலன்களை உறுதி செய்யும் வகையில் நியாயமான மற்றும் வெளிப்படையான பால் கொள்முதல் முறையை செயல்படுத்துவதுடன், அவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாகும்.

கடந்த செப்.1-ம் தேதி, தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஓசூர் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 தொலைதூர கிராமங்களின் பொருளாதார சூழலில் நேர்மறையான புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஆரம்பக்கட்டமாக, 30 கிராமங்களில் இருக்கும் 300 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் 30 பால் சேகரிப்பு மையங்கள் அமைக்கும் விதமாக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இப்பகுதியில் உள்ள சுமார் 1,000 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போதைய நிலவரப்படி, 26 பால் சேகரிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த பால் சேகரிப்பு மையங்களினால் 279 பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். இங்கு விற்கப்படும் விலையானது, குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு லிட்டருக்கு 48 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை முன்பு லிட்டருக்கு 18-26 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக, விவசாயிகள் இப்போது லிட்டருக்கு 25% முதல் 30% வரை கூடுதல் வருமானம் ஈட்டுகிறார்கள். இதனால் ஒரு விவசாயிக்கு கிடைக்கும் கூடுதல் மாத வருமானம் 3 ஆயிரம் ரூபாயாக அதிகமாகியுள்ளது.

இதன் மூலம். பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 13 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேலும் பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு பால் சேகரிப்பாளர்கள் போன்ற புதிய வேலைவாய்ப்புகளை இந்த கூட்டு செயல்பாடு உருவாக்கியுள்ளதன் மூலம் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம் பால் மற்றும் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்துவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளின் வருவாயை கணிசமான அளவில் அதிகரிக்க உதவுகிறது. இனி மேற்கொள்ளப்படவிருக்கும் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் இப்பகுதியிலுள்ள கிராமப்புற மக்களுக்கு நீண்டகால நன்மைகள் கிடைப்பதையும், வாழ்வாதாரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்தபடியே அதிகரிக்க செய்வதையும் உறுதிசெய்யப்படும். மேலும், இச்சமூகத்தில் உள்ள மக்களிடையே தரத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x