Published : 30 Nov 2023 04:48 PM
Last Updated : 30 Nov 2023 04:48 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள், மான்களால் தொடரும் பயிர் சேதத்தை கட்டுப் படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் பயிர் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் சராசரியாக 6,500 ஹெக்டேரில் நெல் பயிர், 5 ஆயிரம் ஹெக்டேரில் சோளம், 350 ஹெக்டேரில் கம்பு பயிர், 20 ஹெக்டேரில் கேழ்வரகு, 10 ஹெக்டேரில் தினை, 13 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச் சோளம்,
800 ஹெக்டேரில் சிறு தானியங்கள், 2 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து, 2,500 ஹெக்டேரில் பச்சை பயிறு, 500 ஹெக்டேரில் துவரை , 100 ஹெக்டேரில் இதர பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. அதோடு பருத்தி, நிலக்கடலை, மொச்சை, கரும்பு, கொத்த மல்லி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள், மான்களால் பயிர் சேதம் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டில் அதிகபட்சமாக ரூ.10 கோடி அளவுக்கு பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மட்டுமே காணப்பட்டு வந்த காட்டுப் பன்றிகள், மான்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மாவட்டத்தின் எல்லை பகுதியான அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதி வரையும், சாத்தூர், வெம்பக்கோட்டை வரையிலும் பல்கிப் பெருகியுள்ளன. குறிப்பாக நீர்வரத்து ஓடைகள் வழியாக இவை இடம் பெயர்கின்றன.
பயிர்களை சேதப்படுத்தி உண்பதோடு, அப்பகுதிகளில் காணப்படும் புதர்களிலும் காட்டுப் பகுதிகளிலும் குட்டியிட்டு பல மடங்காகப் பெருகியுள்ளன. இதனால், காட்டுப் பன்றிகள் மற்றும் மான்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளதால் அவைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளும், வேளாண் துறை, வனத்துறையினரும் திணறி வருகின்றனர். அதோடு, பயிர் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உணவு உற்பத்தி பெருமளவில் சரியும் அபாயம் உருவாகி உள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச் சந்திர ராஜா கூறியதாவது: காட்டுப் பன்றிகள், மான்களால் மட்டுமின்றி மயில்களாலும் பயிர்கள் அதிகம் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பருத்தி, நெல், தென்னை போன்றவையும்,
சிவகாசி, வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை பகுதிகளில் மக்காச் சோளம், பருத்தி போன்ற பயிர்களும் காட்டுப் பன்றிகள், மான்களால் சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோ, ஜப்பான் நிறுவனம், மத்திய அரசு மூலம் ஏராளமான நிதி வழங்குகிறது.
இதன் மூலம் வன விலங்குகளுக்கு ஏற்ற உணவு பயிர்களை பயிரிடவும், அகழி வெட்டவும், அதை பராமரிக்கவும் முடியும். ஆனால், அவ்வாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பயிர்களைக் காக்க சட்டவிரோதமாக சில இடங்களில் விவசாயிகள் மின்வேலிகள் அமைக்கிறார்கள். ஆனால், சில நேரம் விலங்குகள் மட்டுமின்றி விவசாயிகள், கால்நடைகளும் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்வதால் மலையடிவார பகுதிகளில் விவசாயிகள் வேளாண்மையை கைவிட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 சதவீத நிலம் தரிசாக விடப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், அதன் மதிப்பு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட பயிர் வகைகள் குறித்து தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கைகேட்டுள்ளது.
ஆனால், விருதுநகர் மாவட்டத்திலிருந்து இதுவரை இந்த அறிக்கை அனுப்படாமல் உள்ளது. போர்க்கால அடிப் படையில் பயிர் சேதத்தை கணக்கிட்டு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வன விலங்குகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில், மாவட்டத்தில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் கூறியதாவது: காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அவற்றை வன விலங்குகள் பட்டியலிலி ருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். கேரளாவில் காட்டுப் பன்றி களை அழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும்.
காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை, வேளாண் துறை சார்பில் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை பயனளிக்கவில்லை. எனவே, பயிர் சேதம் தொடர்கிறது. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி கூறுகையில், காட்டுப் பன்றிகளை நாய்களை வைத்து விரட்டினால் மட்டுமே பயந்து ஓடுகின்றன. ஆனால், அவ்வாறு செய்தால் வனத்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இரும்பு வலைகள் அமைத்து காட்டுப் பன்றிகளை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கான முயற்சிகளை வனத்துறை எடுக்க வேண்டும். அதோடு வனப்பகுதி அடிவாரத்தில் அகழி அமைத்து, வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயா கூறுகையில், பயிர் சேதம் குறித்து வனத்துறை, வேளாண் துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்து கணக்கீடு செய்து வருகின்றனர். இந்த விவரத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறை நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT