Published : 30 Nov 2023 05:44 AM
Last Updated : 30 Nov 2023 05:44 AM
சென்னை: சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 293 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.5,566.92 கோடி புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
சென்னையில் 2024 ஜன.7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி, மாவட்ட வாரியாக தொழில் முதலீடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட தொழில் முதலீடு, கிண்டியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், 293 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) ரூ.5,566.92 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 4.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் துறையில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டுவர, எம்எஸ்எம்இ துறையிலும் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாவட்டத்துக்கு எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூலம் ரூ.4,368 கோடி முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கும் கூடுதலாக, ரூ.5,566.92 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னையில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, விண்வெளி, பாதுகாப்பு உபகரணங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் 26,447 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தொழில் முனைவோர் தொழில் தொடங்கும் உரிமங்களை விரைவாக பெற, ஒற்றைச்சாளரம் 2.0 மூலம் அரசுத் துறைகள் வழங்கும் 163 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் இதுவரை 26,480 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24,117 தொழில் முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் இத்திட்டம் மூலம் விரைந்து அனுமதிகள் வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு வசதியாக சென்னை அருகே ஒரகடம், பெரும்புதூர், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் தொழிற்பேட்டைகள், கிண்டி, அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமழிசை ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன.
சுயதொழில் திட்டங்கள்: எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதுவரை ரூ.1,099.86 கோடி மானியத்துடன் ரூ.3,890.59 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 30,981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறையாக சொத்து பிணையில்லா கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 25,348 தொழில் முனைவோருக்கு ரூ.3,477.72 கோடி வங்கிக்கடன் உதவிக்கு, ரூ.410.78 கோடிக்கு கடன் உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தங்கள் விலை பட்டியல்கள் மூலம் கடன் பெறும் திட்டத்துக்காக தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,900 விலை பட்டியல்களுக்கு ரூ.1,289.22 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.324.66 கோடி மதிப்பில் 519 ஏக்கர் பரப்பில் 8 தொழிற்பேட்டைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 325.64 ஏக்கரில் 8 புதிய தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், கிண்டி, அம்பத்தூர், சேலத்தில் ரூ.175.18 கோடி மதிப்பில் 264 தொழிற்கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்களை முதல்வர் விரைவில் திறந்துவைக்க உள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு, பள்ளி புத்தாக்க மேம்பாடு ஆகிய திட்டங்களின்கீழ், இதுவரை 8.99 லட்சம் இளைஞர்கள், மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொழில் முனைவோருக்கு ரூ.1.10 கோடிக்கான மானியங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, எம்எஸ்எம்இ துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சோவ், சென்னை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT