Published : 29 Nov 2023 04:29 PM
Last Updated : 29 Nov 2023 04:29 PM

‘தாளவரை’ காபி தூள்: தொழில்முனைவோராக மாறிய இருளர் பழங்குடியின இளைஞர் @ கோத்தகிரி!

இயற்கை விவசாயி ஹெச்.என்.சிவன், தாளவரை காபி உற்பத்தி செய்யும் பீமன் ஆகியோர்.

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் 1879-ம் ஆண்டு 10 ஆயிரத்து 117 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டிருந்தது. தேயிலை அறிமுகமான பின்னர், விவசாயிகள் காபியைவிட்டு தேயிலையை பயிரிட தொடங்கினர். தற்போது, தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், ஊடுபயிர்களாக இருந்த காபி, குறுமிளகு மீண்டும் முக்கிய பயிர்களாக மாறியுள்ளன. இங்கு ரோபஸ்டா, அரேபிகா என இரண்டு ரக காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் அரேபிகா ரகம் ஒரு லட்சம் டன்னும், ரோபஸ்டா 2 லட்சத்து 52 ஆயிரம் டன்னும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில், அரேபிகா ரக காபி தூளுக்கு கிராக்கி அதிகம்.

இந்நிலையில், குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் காபி விவசாயம் அதிகரித்து வருகிறது. குன்னூர், கூடலூர் பகுதிகளில் பல விவசாயிகள் தேயிலை செடிகளை நீக்கிவிட்டு, தற்போது காபி விவசாயத்துக்கு மாறியுள்ளனர். மேலும், ஊடுபயிராக குறுமிளகு பயிரிட்டுள்ளனர். கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளில் சுமார் 8,333 ஏக்கர் அளவுக்கு காபி சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில், கீழ்கோத்தகிரி செம்மனாரை கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடியினர், காபி உற்பத்தியில் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருளர் பழங்குடியினர் உற்பத்தி செய்யும்
காபி தூள் மற்றும் பொருட்கள்.

காபி சாகுபடி செய்து கொட்டைகளை தனியாருக்கு விற்று சொர்ப்ப பணம் பெற்று வந்த நிலையில், தாங்களே காபி கொட்டைகளை அரைத்து, தூளாக்கி, விற்பனை செய்து தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றத்துக்கு வித்திட்டவர் பீமன். இந்த பழங்குடியின இளைஞர், தன்னார்வ நிறுவனங்களில் பணிபுரிந்து கரோனா காலத்தில் வேலையிழந்த நிலையிலும், வாழ்வாதாரம் கேள்விக்குறியானபோது தனது அனுபவத்தை கொண்டு, காபியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய முடிவு செய்தார். அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு, ‘தாளவரை’ என தனி பிராண்ட் உருவாக்கி, முழுவதும் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் காபி தூள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பெரும் நிறுவனங்கள் விளையாடி வரும் சந்தையில், தற்போது பழங்குடியினர் தங்கள் தடத்தை அழுத்தமாக பதித்துள்ளனர்.

இதுகுறித்து பீமன் கூறும்போது, “கீழ்கோத்தகிரி பகுதியிலுள்ள எங்கள் செம்மனாரை கிராமத்தில் சுமார் 100 இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கிறோம். அடர்ந்த வனப்பகுதியிலுள்ள எங்கள் கிராமத்தில் பல காலமாக காபி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். விளையும் காபி கொட்டைகளை பறித்து, வெயிலில் உலர்த்தி, வியாபாரிகளிடம் விற்றுவிடுவோம். அவர்கள் கொடுக்கும் சொற்ப பணத்தை கொண்டு, வாழ்வாதாரம் ஓடிக்கொண்டிருந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். கரோனா காலத்துக்கு பின்னர் வேலையிழந்தேன்.

‘தாளவரை’ இயற்கை காபி தூள்.

எங்கெங்கோ முயற்சி செய்தும், எனக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போது, தான் இயற்கை விவசாயியான ஹெச்.என்.சிவனின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயற்கையான முறையில் காபி உற்பத்தி செய்து, அதை காபி தூளாக மாற்றி, நீங்களே விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஊக்குவித்தார். அவரது ஆலோசனைப்படி, என் வசமுள்ள 3 ஏக்கர் காபி தோட்டத்தில் அரேபிகா ரக காபி செடிகளிலிருந்து கிடைக்கும் காபி கொட்டைகளை அறுவடை செய்து, அரைத்து தூளாக்கி, தாளவரை என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறேன்.

மேலும், எங்கள் கிராமத்திலுள்ள 100 குடும்பங்களுக்கு, குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் என 100 ஏக்கர் காபி தோட்டம் உள்ளது. அவர்களையும் இந்த தொழிலில் ஒன்றிணைத்துள்ளேன். தற்போது இயற்கையான உணவு பொருட்களுக்கு மவுசு உள்ளது. வனப்பகுதியிலுள்ள நாங்கள் இயற்கையான முறையிலேயே சாகுபடி செய்கிறோம். தற்போது, எங்கள் காபி தூள் கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகிறது. எங்கள் தயாரிப்புக்கு தேவை அதிகரித்து சந்தை விரிவடையும் என நம்புகிறோம்” என்றார். இயற்கை விவசாயி ஹெச்.என்.சிவன் கூறும்போது, “இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

மேலும், வேளாண் பொருட்கள் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். ஆந்திர மாநிலத்திலுள்ள பழங்குடியினர், இயற்கையான முறையில் காபி தூள் தயாரித்து ‘அரக்கு’ என்ற பிராண்டில் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களின் ஒரு கிலோ காபிதூள் ரூ.7000 வரை விற்பனையாகிறது. அந்த தூள் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில், நமது மாவட்டத்தில் இதேபோல செய்யலாம் என்று எண்ணிய நிலையில், இருளர் பழங்குடியினரான பீமன் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு இந்த யோசனையை கூற, சமூதாயத்தினரை ஒருங்கிணைத்து தற்போது ‘தாளவரை’ என்ற பெயரில் காபி தூள் விற்பனையை அவர் தொடங்கியுள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x