Last Updated : 29 Nov, 2023 03:58 PM

 

Published : 29 Nov 2023 03:58 PM
Last Updated : 29 Nov 2023 03:58 PM

ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் கமகமக்கும் கொடைக்கானல் ‘தாண்டிக்குடி காபி’!

தாண்டிக்குடி பகுதியில் காபி அறுவடையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

கொடைக்கானல்: கொடைக்கானல் தாண்டிக்குடி உள்ளிட்ட கீழ்மலைக் கிராமங்களில் விளையும் காபி ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. இதில் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடியில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றனர். கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பறையூர், காமனூர், கே.சி.பட்டி, பாச்சலூர், ஆடலூர், பெரும்பாறை, பன்றிமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் ஆரம்ப காலத்தில் 60 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் காபி சாகுபடி நடந்தது.

காபி பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள
பணியாளர்கள்.

தற்போது பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, இடைத்தரகர்கள் தொல்லை போன்ற காரணங்களால் காபி சாகுபடி பரப்பு 33 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கி விட்டது. இங்கு அரபிகா, ரொபஸ்டா வகை காபி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நறுமணம், ரசித்து ருசிக்க வைக்கும் சுவையால் இங்கு விளையும் காபிக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இன்னும் தனி மவுசு உண்டு. காபி உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தாண்டிகுடியில் மத்திய அரசின் மண்டல காபி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

வெயிலில் உலர வைக்கப்பட்டுள்ள காபி கொட்டைகள்.

அங்கு காபி சாகுபடியை அதிகரிக் கும் தொழில்நுட்பம், காபி கன்றுகள், மானி யம் மற்றும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஒரு காபி செடி குறைந்தது 40 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழக் கூடியது. ஒரு ஏக்கரில் 500 முதல் 1,000 கிலோ வரை காபி கிடைக்கும். காபி அறுவடை செப்டம்பர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறும். அதன்படி, தற்போது கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காபி அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த பழுத்த காபியை தோல் நீக்கி கழுவி சுத்தம் செய்து கொட்டைகளை தனியாக பிரித்தெடுத்து வெயிலில் காயவைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

தற்போது ஒரு கிலோ காபி கொட்டை ரூ.250 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையானால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். இங்குள்ள காபி விவசாயிகள் இணைந்து ‘காபி விவசாயிகள் உற்பத்தியாளர் குழு’ மூலமாக காபி கொட்டைகளை ஆண்டுதோறும் டன் கணக்கில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

ரவிச்சந்திரன்

இது குறித்து தாண்டிக்குடியைச் சேர்ந்த காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறியதாவது: பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், நிரந்தர விலையின்மை போன்ற காரணங்களால் காபி சாகுபடி குறைந்து வருகிறது. இந்தாண்டு காபி விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு உள்ளது. தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காபி விவசாயிகள் உற்பத்தியாளர் குழு மூலம் வரும் டிச.1-ம் தேதி ஜப்பானுக்கு 15 டன் காபி கொட்டைகளை ஏற்றுமதி செய்ய உள்ளோம். ஏற்றுமதியில் விவசாயிகளே நேரடியாக களம் இறங்கி உள்ளதால் போதிய லாபம் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கு மேல் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் இருந்ததை போல் இன்னும் தாண்டிக்குடி பகுதியில் விளையும் காபிக்கு மவுசு குறையவில்லை என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x