Published : 21 Jan 2018 07:07 AM
Last Updated : 21 Jan 2018 07:07 AM
விஜய் கோவிந்தராஜன், ஸ்டிராட்டஜி மற்றும் இன்னோவேஷன் துறையில் சர்வதேச அளவில் முக்கியமான பேராசிரியர். அமெரிக்காவில் உள்ள டக் நிர்வாகக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை இன்னோவேஷன் ஆலோசகராக இரு ஆண்டுகள் பணியாற்றியவர். Reverse Innovation, Three Box Solution உள்ளிட்ட முக்கியமான நிர்வாகவியல் புத்தகங்களை எழுதியவர். சிதம்பரத்தில் பிறந்தவர். சி.ஏ-வில் தங்கப்பதக்கம் பெற்றவர். அதன் தொடர்ச்சியாக ஹார்வேர்டு கல்லூரியில் எம்பிஏ படித்து, ஐஐஎம் அகமதாபாத்தில் பேராசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர். 1985-ம் ஆண்டு முதல் டக் நிர்வாக கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இ-மெயில் பரிவர்த்தனை, கடந்த வாரத்தில் சந்திப்பாக மாறியது. தொழில், புத்தகம், வாழ்க்கை, தொழில் துறை தலைவர்கள் என 90 நிமிடங்களுக்கு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அவருடனான உரையாடலில் இருந்து...
சி.ஏ-வில் தங்கப் பதக்கம் வாங்கிய நீங்கள் ஏன் பேராசிரியராக வேண்டும் என முடிவெடுத்தீர்கள்?
என்னுடைய தாத்தாதான் காரணம். நாங்கள் அண்ணாமலை நகரில் இருந்த போது வீட்டருகில் பலருக்கும் அவர் பாடம் நடத்தி வந்தார். அதனால் பல நாட்கள் வீட்டுக்கு காலதாமதமாக வருவார். வீட்டுக்கு பெரியவரான அவர் சாப்பிடாமல் நாங்கள் யாரும் சாப்பிட முடியாது என்பதால் அவர் வரும் வரை காத்திருப்போம். அப்போது தாத்தா ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார் என நினைத்திருக்கிறேன்.
ஆனால் என்னுடைய பருவ வயதில்தான் அதற்கான காரணம் புரிந்தது. எங்கள் வீட்டுக்கு பல முக்கிய பிரமுகர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும் தாத்தாவிடம் படித்தவராக இருப்பார்கள். அடுத்தவர் வாழ்வில் மாற்றத்தை /தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் அப்போதுதான் எனக்கு தோன்றியது. நான் செய்யும் வேலை தாக்கத்தை ஏற்படுத்தாது எனில் அவற்றை நான் செய்வதில்லை. ஒருவேளை தொழில் (சிஏ தொடர்பான) தொடங்கி இருந்தால் கூட ஒரு நாளைக்கு 10 நல்ல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். ஆனால் நான் 100 மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் போது அவர்கள் அனைவரும் 10 நல்ல முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் சமூகத்தில் பெரிய தாக்கம் இருக்கும்.
நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி இருப்பீர்கள். பல நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கும்போது அவர்களின் பலம், பலவீனம் தெரியும். நாமே ஏன் தொழில் தொடங்கக் கூடாது என உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?
இந்த எண்ணம் எனக்கு பல முறை தோன்றி இருக்கிறது. ஆனால் தொழில் தொடங்குவதற்கு அறிவு மட்டுமே போதாது. அறிவை தாண்டி பல திறமைகள் தேவையாக இருப்பதால்தான் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது. தவிர பல இடங்களில் சமாதானமாக போக வேண்டி இருக்கும். கோபம், சண்டை என பலவிதமான உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும். என்னுடைய பலமும், எல்லையும் எனக்குத் தெரியும். தொழில் தொடங்கி இருந்தால் நான் வெற்றி அடைந்திருப்பேனா என்று சொல்வதற்கில்லை.
சர்வதேச அளவில் பல முக்கியமான நிறுவனங்களின் தலைமையிடம் அமெரிக்காவில் இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருக்கிறது.
இந்தியாவில் இருந்து சர்வதேச நிறுவனம் தோன்றாமல் இருப்பதற்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து பெரிய நிறுவனங்கள் வருமா?
இந்தியா மிகவும் பழமை வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் தற்போதைய அமைப்புக்கு நாம் வந்து 70 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இதிலும் 40 ஆண்டுகளுக்கு மேல் லைசென்ஸ் ராஜ் இருந்தது. அதனால் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் தங்களுடைய முழு திறமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு 1990-களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 90,000 பணியாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது 10,000 பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் உற்பத்தி 5 மடங்கு உயர்ந்திருக்கிறது. தொழில்நுட்பங்களை பல நிறுவனங்கள் சிறப்பாகக் கையாண்டுள்ளன. 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது.
தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இளைஞர்களில் பெண்களின் பங்கு கணிசமாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. நிலையான அரசு இருக்கிறது. தொழில்நுட்பத்தால் ஸ்டார்ட் அப் அதிகமாக இருப்பதால், முன்பு இருந்த நிறுவனங்களை விட தற்போதைய நிறுவனங்கள் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் என்பது சரி. ஆனால் அனைவருக்கும் இங்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா? வேலை கிடைக்கவில்லை என்றால் சமூகத்தில் குழப்பம் நிகழாதா?
தற்போது இந்தியாவுக்கு இருக்கும் சவால் தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான். ஒரு மாதத்துக்கு 10 லட்சம் இளைஞர்கள் வேலைக்கு தயாராகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் நிறுவனங்களை நடத்தாமல் தொழில்முனைவுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். எந்தெந்த வகையில் சலுகை கொடுக்க முடியுமோ சலுகைகளை கொடுத்து, தொழில்முனைவினை ஊக்குவிக்க வேண்டும். இது சவால் மிக்கது. ஆனாலும் செய்ய வேண்டும்.
உங்களுடைய புத்தகங்களில் புதுமையை இறக்குமதி செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இங்கிருக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அமெரிக்காவின் பிரதியாகதானே இருக்கின்றன?
இ-காமர்ஸ் என்னும் பெயர் ஒன்றாக இருக்கலாம். ஆனால் பிசினஸ் மாடல் ஒன்றாக இல்லை. உதாரணத்துக்கு அமேசானை எடுத்துக் கொள்ளுங்கள். அமேசான் அமெரிக்காவிலும் செயல்படுகிறது. இந்தியாவிலும் செயல்படுகிறது. ஆனால் அங்கிருக்கும் பிசினஸ் மாடலை இங்கு அமேசானால் செயல்படுத்த முடியாது. உதாரணத்துக்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டால் பதிப்பகத்திடம் இருந்து அமேசான் நேரடியாக புத்தகங்களை வாங்கி அமெரிக்கா முழுவதும் இருக்கும் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும். புத்தகத்தை ஒருவர் வாங்க நினைத்தால் அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிடங்கில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் இந்தியாவில் ஆங்கில மொழி புத்தகங்களை போல பிராந்திய மொழியிலும் புத்தகங்கள் உள்ளன. அதனால் இந்த புத்தகங்களை இந்தியா முழுவதும் இருக்கும் கிடங்குகளுக்கு அனுப்புவதும் நடக்காது. அதே சமயத்தில் டெல்லியில் உள்ள ஒருவர் தமிழ் புத்தகம் வாங்குவதற்கான சாத்தியமும் இருக்கிறது. இப்போது டெல்லியில் உள்ள வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை அமேசானில் வாங்க நினைத்தால், அமேசானுக்கு ஆர்டர் கிடைக்கும். அந்த ஆர்டர் பதிப்பாளருக்குச் செல்லும். பதிப்பாளர் நேரடியாக டெல்லிக்கு அந்த புத்தகத்தை அனுப்பி வைப்பார். அமெரிக்காவில் பதிப்பாளர்களுக்கு எந்த வேலையும் கிடையாது.
அடுத்தாக அமெரிக்காவில் கிரெடிட் கார்டு மூலமாகவே கிட்டத்தட்ட மொத்த பரிவர்த்தனையும் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் அனைத்து விதமான (ரொக்கம் உள்ளிட்ட) பரிவர்த்தனை நடக்கிறது. இ-காமர்ஸ் என்னும் வார்த்தை ஒன்றாக இருக்கலாம், ஆனால் பிசினஸ் மாடல் வேறு.
ரிவர்ஸ் இன்னோவேஷன் புத்தகத்தில் டாடா நானோவும் புதுமையான முயற்சி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நானோவின் தற்போதைய நிலைமை வேறு. அனைத்து சூழலிலும் ரிவர்ஸ் இன்னோவேஷனில் வெற்றி பெற முடியாதில்லையா?
ஒரு புராடக்டாக நானோ மிகப்பெரிய வெற்றி. 2,000 டாலரில் கார் தயாரிப்பு என்பது நிச்சயம் வெற்றிதான். ஆனால் மார்கெட்டிங்கில் நடந்த தவறு காரணமாக விற்பனையில் வெற்றி பெற முடியவில்லை. தவிர கார் தயாரித்து வெளிவருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே நானோ குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சந்தையில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. போட்டி நிறுவனங்களும் காத்திருந்தன. சிறிய தவறு கூட பெரிதாக விவாதிக்கப்பட்டது. ஆனால் ஆட்டோமொபைல் துறையின் சிந்தனையை டாடா நானோ மாற்றி அமைத்தது. ரெனால்ட் நிறுவனம் இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு க்விட் மாடலை அறிமுகம் செய்தது.
நிறுவனத்தில் புதுமையை கொண்டுவருவதற்கு புதிய குழுவை உருவாக்க வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அப்படியானால் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இது சாத்தியமா?
தமிழ்நாட்டை சேர்ந்த முருகானந்தம், (குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பவர்) சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடுகிறார். இது பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியமான கண்டுபிடிப்பு. முன்பெல்லாமல் மாதத்துக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லாததை நான் பார்த்திருக்கிறேன். அப்படியென்றால் 6 மாதத்துக்கு 18 நாட்கள் என்றால் படிப்பு எவ்வளவு வீணாகும். 90 சதவீத இந்தியா இன்னும் கிராமங்களில்தான் இருக்கிறது. அவர்களுக்கான தீர்வை தனிநபராக இவர் உருவாக்கி இருக்கிறார். இவரை போன்ற தனிநபர் தீர்வினை உருவாகும் போது சிறு நிறுவனங்களில் புதுமையை உருவாக்குவது ஏன் சாத்தியம் இல்லை.?
பழைய வெற்றிகளை மறக்க வேண்டும் என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? வெற்றி தன்னம்பிக்கை கொடுப்பது. தவிர வெற்றி என்பது உளவியல் சம்பந்தப்பட்டது. எப்படி மறக்க முடியும்?
வெற்றிதான் முக்கியமான பிரச்சினை. அதில் இருந்து வெளியே வருவது அவசியம். நான் சிஏவில் தங்கப்பதக்கம் பெற்றவன். அந்த வெற்றியில் இருந்திருந்தால் நான் அப்படியே இருந்திருப்பேன். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பழைய வெற்றிகளை மறந்துதான் ஆக வேண்டும். இது எளிமையல்ல. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். உதாரணத்துக்கு டிசிஎஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், கால் சென்டர் பிரிவு வெற்றிகரமாக இருக்கும் போதே, அந்த தொழிலில் இருந்து வெளியேறியது. கால் சென்டரில் அதிக பணியாளர்கள் தேவைப்படும். தொழில் விரிவடையும் போது கூடுதல் பணியாளர்களை கையாள வேண்டி இருக்கும். தற்போது 3 லட்சம் பேர் இருக்கின்றனர். ஒருவேளை கால் சென்டர் பிரிவு தற்போது இருந்தால் மேலும் பல லட்சம் பணியாளர்களை கையாள வேண்டி இருக்கும். 5 லட்சம் பணியாளர்களை கையாளும் சூழல் என்பது மிகவும் சிக்கலானது. அதனால் அந்த தொழில் வெற்றிகரமாக இருக்கும் போதே அதில் இருந்து வெளியேறினர். இருக்கும் பணியாளார்களை வைத்து கூடுதல் வருமானத்தை எப்படி அதிகமாக்குவது என டிசிஎஸ் யோசித்தது.
நன்றாக கவனியுங்கள் கால்சென்டர் பிரிவு மோசமானது என்பதற்காக மூடப்படவில்லை. அதிக லாபம் இருக்கும் பிரிவாக இருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த பிரிவு மூடப்பட்டது.
இந்த இடத்தில் நிறுவனத்தின் தன்மை, பாரம்பரியம் அந்த முடிவை எடுக்கிறதா அல்லது தலைவர்கள் தங்களது தொலைநோக்கு பார்வையினால் முடிவு எடுக்கிறார்களா?
நிறுவனத்துக்கு பாரம்பரியம் இருந்தாலும், இதுபோன்ற கடினமான முடிவுகளை சம்பந்தப்பட்ட தலைவர்களால்தான் எடுக்க முடியும். இருந்தாலும் சர்வாதிகார அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது. கூடி விவாதித்து, சந்தை சூழ்நிலை மற்றும் காரணங்களுடன் இந்த முடிவை எடுக்க வேண்டும். இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்களாக இந்த கடிமான முடிவை எடுக்கவில்லை. சில காலம் கழித்து சூழ்நிலை காரணமாக இதே முடிவை எடுக்க வேண்டி இருக்கும். தற்போது ஐடி நிறுவனங்கள் பழைய வெற்றிகளில் தேங்கி விட்டனர். ஆனால் புறச்சூழ்நிலை வேகமாக மாறி வருகிறது.
உங்களுடைய ரிவர்ஸ் இன்னோவேஷன் புத்தகத்தில் அதிக வசதிகள் அதிக விலை உள்ள பொருளுக்கு மாற்றாக குறைந்த விலையில் ஓரளவுக்கு அதிக வசதிகள் இருக்கும் புராடக்ட்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறீர்கள். இப்படி உருவாக்கும் போது அதிக விலை இருக்கும் பொருளுக்கான தேவை குறைந்து விடாதா? அதாவது ரிவர்ஸ் இன்னோவேஷன் ஏற்கெனவே இருக்கும் பிசினஸை பாதிக்காதா?
இந்த இடத்தில் பிசினஸை புரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு ஜிஇ நிறுவனம் இசிஜி மெஷின்களை தயாரிக்கிறது. அமெரிக்காவில் ஒரு இசிஜி மெஷினின் விலை 20,000 டாலர். ஆனால் இந்தியாவில் 400 டாலர்களுக்கு அந்த மெஷினை ஜிஇ அறிமுகப்படுத்தியது. இதனால் புதிய சந்தை உருவாகுமே தவிர, ஏற்கெனவே இருக்கும் மெஷின்களுக்கு ஆபத்து இருக்காது.
அமெரிக்காவில் மூன்று வகையான புராடக்ட்கள் உள்ளன. உதாரணத்துக்கு 20,000 டாலர் மெஷினில் அனைத்து வகையான வசதிகளும் (100 சதவீத வசதிகளும் என கொண்டால்) இருக்கின்றன. இதற்கடுத்து 18,000 டாலரில் 90 சதவீத வசதிகள் இருக்கின்றன. 15,000 டாலரில் 80 சதவீத வசதிகள் உள்ளன. ஆனால் இந்தியாவின் தேவை வேறு. 90 சதவீத இந்தியர்களுக்கு 15,000 டாலர் மெஷின் கூட அதிக விலைதான். இந்த இடத்தில்தான் 50 சதவீத வசதிகள் இருக்கும் 400 டாலர் மெஷினை ஜிஇ அறிமுகம் செய்தது.
400 டாலர் மெஷினில் இருக்கும் வசதிகளும் 20,000 டாலர் மெஷினில் இருக்கும் வசதிகளும் ஒன்றல்ல. 400 டாலர் மெஷினில் இதயம் எப்படி இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் மட்டுமே இருக்கும்.
ஒருவேளை இந்த 400 டாலர் மெஷின் அமெரிக்காவுக்கு வந்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்காவை எடுத்துக்கொண்டாலும் ஏழைகள் இருக்கிறார்கள். அங்கிருக்கும் கிராமப்புற மருத்துவமனைகளில் கூட இந்த மெஷின் தேவைப்படும். அடுத்ததாக ஆம்புலன்ஸில் 20,000 டாலர் மெஷினை எடுத்துசெல்ல முடியாது. ஆனால் அங்கு இந்த 400 டாலர் மெஷின் பயன்படும்.
மூன்றாவதாக ஒரு பொருளின் விலை குறையும் போது அதற்கு மிகப்பெரிய சந்தை உருவாகும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு டிவி, ஒரு கம்ப்யூட்டர், ஒரு போன் என இருந்தது. ஆனால் இந்த பொருட்களின் விலை குறையும் பட்சத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவை நம் வீட்டில் இருக்கின்றன. அதுபோல இசிஜி மெஷினின் விலையும் குறையும் போது ஒரே மருத்துவமனையில் இருக்கும் அனைத்து மருத்துவர்களிடமும் இசிஜி மெஷினை பயன்படுத்த முடியும். நேரம் மீதமாகும்.
ஆனால் ஒரே ஒரு பாதகம் இருக்கிறது. 400 டாலர் மெஷினை உருவாக்க அதிக முதலீடு செய்திருக்கலாம். இதில் புதுப்புது வசதிகள் மேம்படுத்தும் போது விலையும் கொஞ்சம் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் 15,000 டாலர் மெஷினில் இருக்கும் வசதிகளுக்கு இணையாக 1,000 டாலரில் ஒரு மெஷின் உங்களிடம் இருக்கும். ஆனால் 15,000 டாலர் மெஷினின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதற்காக 400 டாலர் மெஷினில் எந்த புது மாற்றமும் செய்யாமல் விட்டால் வேறு ஒரு நிறுவனம் புதிய சந்தையை உருவாக்கும்.
ஜிஇ நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஜெப் இம்மெல்ட் உடன் பணியாற்றி (chief innovation consultant) இருக்கிறீர்கள். அவருடனான அனுபவம் குறித்து?
புதுமைகளால் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குபிடிக்க முடியும் என நம்பும் தலைவர். புதுமைகளில் கவனம் செலுத்துவதால் உங்கள் நிறுவன பங்குகள் உடனடியாக உயராது என்று தெரிந்தும் அதில் கவனம் செலுத்திய தலைவர் அவர். 2008-09 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவருடன் பணியாற்றேன்.
எங்கள் இருவரின் சந்திப்பும் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. எனக்கு ஒதுக்கப்பட்ட நாளின் ஜிஇ நிறுவனத்தின் முடிவுகள் வருகின்றன. முதல் முறையாக சந்தை எதிர்பார்ப்புக்கு மாறாக வரும் முதல் முடிவு அது. அப்போது சர்வதேச நிதி நெருக்கடி இருந்த நேரம். இந்த முடிவுகளால் அவருக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த நெருக்கடியாக இருந்த நேரம். அப்போது எனக்கு முன்னுரிமை கிடைக்காது என நினைத்திருந்தேன். ஆனால் என் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக என்னிடம் இயல்பாக பேசினார். அதாவது என்னிடம் இருந்த நேரங்களை முழுமையாக எனக்காக செலவு செய்தார்.
அடுத்து எங்களுடைய கல்லூரிக்கு வருமாறு கேட்டிருந்தேன். ஆறு மாதங்களுக்கு முன்பு என்ன தேதி, பார்வையாளர்கள் யார் என்பது குறித்த தகவல்களை அனுப்பினோம். பார்வையாளர்கள் அனைவரும் ஜிஇ நிறுவனத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையவர்கள். அவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ ஜிஇயில் பணியாற்றியவர்கள்.
ஒவ்வொருவரிடமும் சில மணித்துளிகள் பேசி, அவர்கள் ஜிஇ நிறுவனத்துக்கு எப்படி தொடர்பு என்பதையும் நினைவுகூர்ந்து பேசினார். ஜிஇ போன்ற மிகப்பெரிய ஒரு நிறுவனத்தின் தலைவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 நபர்களை சந்திப்பார்கள். ஒவ்வொருவரின் தேவையும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அனைவரின் தேவை மற்றும் வருபவரின் தன்மையை புரிந்துகொண்டு உரையாடுவதற்கு மிகப்பெரிய திறன் வேண்டும்.
இந்தியாவில் எம்பிஏ- கல்வி சர்வதேச தரத்தில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
இந்தியாவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல அங்கு படிக்கும் மாணவர்களின் திறன்/அறிவு குறித்தும் சந்தேகம் இல்லை. ஆனால் முக்கியமான சில வேற்றுமைகள் இருக்கின்றன.
எந்தவிதமான பணி அனுபவமும் இல்லாமல் இங்கு எம்பிஏ படிக்க முடியும். இளங்கலை பட்டம் முடித்து சில ஆண்டுகள் கேட் தேர்வு எழுதுவதற்காக செலவிடுகிறார்கள். ஆனால் பணி அனுபவம் இல்லாமல் படிக்கிறார்கள்.
ஆனால் அமெரிக்காவில் 5 அல்லது 6 ஆண்டுகள் அனுபவம் இல்லை என்றால் எம்பிஏ படிக்க முடியாது. இதில் பெண்களுக்கு சில விலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 21 வயதில் யுஜி, அதனைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பணி அனுபவம், அதனை தொடர்ந்து எம்பிஏ படிப்பு, கடனை அடைப்பதற்கு சில ஆண்டுகள் என வைத்தால், பெண்களுக்கு குழந்தை பேறு அடைவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பெண்களுக்கு சில சலுகைகள் வழங்குகிறார்கள். அனுபவம் இல்லாமல் படிக்கும் போது பிசினஸ் பற்றிய புரிதல் குறைவாக இருக்கிறது.
அடுத்ததாக இந்தியாவில் ஆராய்ச்சி என்பதே குறைவாக அல்லது இல்லை என்னும் நிலையிலே இருக்கிறது.என்னுடைய புத்தகத்தில் இருக்கும் உதாரணங்கள் எல்லாமே இங்கிருந்து எடுத்தவைதான். ஆனால் இங்கிருக்கும் பேராசிரியர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஆராய்ச்சியில் ஈடுபடும் போதுதான் புதிய கருத்துகள் கிடைக்கும். ஏற்கெனவே எழுதப்பட்ட புத்தகங்களில் இருந்துதான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவே தவிர புதியதாக ஒன்றை இந்திய மேலாண்மை பேராசிரியர்கள் உருவாக்கவில்லை.
மூன்றாவது இந்தியாவில் மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு சமூகம் குறித்த புரிதல் குறைவாக இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இந்தியாவில் உங்களுக்கு பிடித்த தொழில் துறை தலைவர் யார்?
பல தலைவர்களிடம் நேரடியாகப் பழகி இருக்கிறேன். இதில் ஆனந்த் மஹிந்திரா எனக்கு மிகவும் பிடித்தவர். தொழில் துறையை பொறுத்தவரை சிலர் குறுகிய காலத்துக்கான யோசனைகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். சிலர் நீண்ட கால திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஆனால் ஆனந்த் மஹிந்திரா இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துவார். ஏனெனில் ஒரு நிறுவனத்துக்கு குறுகிய காலமும் முக்கியம், நீண்ட காலமும் முக்கியம்.
இந்திய தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இப்போதைய இந்தியாவில் நான் இளைஞனாக இருக்கக் கூடாதா என நினைக்கிறேன். தற்போதைய இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. தொழில் என்பதே பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அமெரிக்காவில் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் இங்கு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள்/சிக்கல்கள் உள்ளன. இவை அனைத்துமே தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகள்தான். இப்போதைய இந்தியாவில் இருப்பது உங்களுக்கு கிடைத்த வரம்.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT