Published : 25 Nov 2023 06:18 AM
Last Updated : 25 Nov 2023 06:18 AM

பில்டர் காபி நிலையம் தொடங்க மானியத்துடன் கடனுதவி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதியதாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் , என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

தொழில் முனைவோர் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்க உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணத்துக்கு விலக்கும் அளிக்கப்படும். இத்தொழில் செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x