Published : 24 Nov 2023 09:04 PM
Last Updated : 24 Nov 2023 09:04 PM
கோவை: “நான் தொழில்நுட்பத்தை ஒரு மகத்தான சாத்தியமாக பார்க்கிறேன். அதேசமயம், நாம் அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது நம் வாழ்வின் மிக கொடிய பிரச்சினையாக மாறிவிடும்” என 18 நாடுகளின் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் சத்குரு கூறினார்.
தொழில்முனைவோர்களுக்காக ஆண்டுதோறும் பிரத்யேகமாக நடத்தப்படும் ‘இன்சைட்’ நிகழ்ச்சி கோவை ஈஷா யோக மையத்தில் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 18 நாடுகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதன் தொடக்க விழாவில் சத்குரு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நீண்ட நெடுங்காலமாக நாம் பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு நாகரிகமாக இருந்துள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உலகில் பயன்படுத்தப்பட்ட உற்பத்திப்பொருள்களில் 25 சதவிகிதம் இந்த நாட்டிலிருந்துதான் சென்றது. பாரதம் வேலை வாய்ப்புகளின் நாடல்ல, பாரதம் எப்போதும் தொழில் முனைவோரின் நாடாக இருந்துள்ளது. நமக்கு எப்போதும் தொழில் முனைவின் திறன்கள் இருந்துள்ளன. அதைப் பெரிய அளவிற்கு வளர்ப்பது மட்டுமே இப்போதைய தேவை.
இந்த கலாச்சாரத்தில் தொழில்துறையில் தோல்வியடைவோருக்கு நாம் ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க வேண்டும். மக்களிடத்தில் சாகச உணர்வின் நெருப்பைத் தூண்ட இது அவசியமாகிறது. யாரோ ஒருவர் தோல்வியடையும்போது, பாதுகாப்பு வலை இல்லாமல் அவர்கள் வீதியில் விழுந்தால், மக்கள் சாகசங்களில் இறங்கத் துணியமாட்டார்கள், அது தொழில் முனைவின் உற்சாகத்தைக் கொன்றுவிடும். தொழில்முனைவு என்பது வாழ்க்கையை வாழ்வதற்கான மற்றொரு வழி அல்ல. வாழ்க்கையை உருவாக்குவதற்கான வழி” என கூறினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து அவர் பேசுகையில், “நான் தொழில்நுட்பத்தை ஒருபோதும் ஒரு பிரச்சினையாக பார்ப்பதில்லை; அது மகத்தான ஒரு சாத்தியம். ஆனால் வாழ்க்கையின் தன்மை எத்தகையது என்றால், நாம் ஒரு சாத்தியத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றால், அது நம் வாழ்வின் மிகக்கொடிய பிரச்சனையாக மாறக்கூடும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் இந்தியா சட்டம், 6 ஜி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சத்குருவுடன் கலந்துரையாடினார். சத்குரு அகாடமி சார்பில் நவம்பர் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர்.கிருஷ்ணா, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உட்பட இந்தியாவின் பல முன்னணி வர்த்தக தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...