Published : 18 Jan 2018 12:35 PM
Last Updated : 18 Jan 2018 12:35 PM
இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக இன்றும் புதிய உச்சத்தை தொட்டன. . இன்றை காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 35,476 புள்ளிகளை கடந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10,887 புள்ளிகளை தொட்டது.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் இதற்கான காரணம் குறித்து பங்கு வர்த்தக ஆலோசகர் டி.ஆர். அருள் ராஜன் தெரிவித்துள்ளதாவது:
‘‘உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், பங்குச்ந்தைக்கு பெரிய அளவில் ஊக்கத்தை தந்துள்ளன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக புதிய உச்சம் கண்டுள்ளன. குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டு வருகின்றன.
வங்கிகள் சீரமைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் வங்கிகளில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதம் வரை அதிகரிப்பது குறித்த பரிசீலித்து வருகிறது. இதனால் வங்கித்துறை வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த தகவல் பங்குச்சந்தைக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வங்கித்துறை பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 70 பொருட்களுக்கான விலை மறுபரிசீலனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் தேக்கம் உள்ள நிலையில் இந்த முடிவால் வர்த்தகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்பு உள்ளது. இதுவும் பங்குச்சந்தைக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஐடி-துறை நிறுவனங்கள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளன.
இதை தொடர்ந்து இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் ஊக்கமாக அமைந்துள்ளன. எனவே, அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுதவிர அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்று ஏற்றம் கண்டதால், சர்வதேச சூழலும் நமது பங்குச்சந்தைக்கு ஊக்கம் அளித்துள்ளன.
பங்குச்சந்தையை பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கும் ஏற்றம் தொடரலாம். எனினும் சிறு முதலீட்டாள்கள் பெரிய முதலீடுகளை செய்யும் போது கவனத்துடன் செயல்படுவது அவசியம். சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் முதலீடு செய்வதைவிட, சந்தை சற்று சரிவை சந்திக்கும் வரை காத்திருப்பது நல்லது. நடுத்தர முதலீட்டாளர்கள் ஏற்கெனவே செய்துள்ள முதலீடுகளை விற்று, லாபத்தை பதிவு செய்யலாம்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT