Published : 20 Nov 2023 12:40 PM
Last Updated : 20 Nov 2023 12:40 PM
கரூர்: கடைகளில் சில்லறையில் விற்கப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ( எஃப்எஸ்எஸ்ஏஐ ) அறிவித்துள்ளது.
பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களின் காலாவதி தேதி, தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்ற விதி உள்ளது. இதனிடையே, சில கடைகளில் சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளின் தரம் சரிவர இல்லை என உணவுப் பாதுகாப்பு துறைக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, பேக்கிங் செய்யப்படாமல் சில்லறையாக விற்கப்படும் இனிப்புகளுக்கும் காலாவதி தேதி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ( எஃப்எஸ்எஸ்ஏஐ ) உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் அமலில் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சில்லறையில் இனிப்பு வகைகள் விற்கப்படும் கடைகளில், இனிப்பின் பெயருடன் காலாவதி தேதி குறிப்பிட்டு ( Best Before Day ) வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாகவும், அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை இது தொடரும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த நவ.7-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் காலாவதி தேதியை குறிப்பிடலாம் என்றும், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி அறிவிப்பு குறிப்பிடுவது தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிமேல், சில்லறையில் விற்கப்படும் இனிப்புகளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்பதை வாடிக்கையாளர்கள் அறிய முடியாத நிலை ஏற்படும் என்பதால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT