Published : 20 Nov 2023 05:07 AM
Last Updated : 20 Nov 2023 05:07 AM

சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க `மக்கள் மளிகை' கடைகளை திறக்க வேண்டும்: வணிகர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்

சென்னை கே.கே.நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், லெஜண்ட் சரவணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகங்களைபோல, சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க மக்கள் மளிகைக் கடைகளை திறக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரமைப்பின் பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்தார். தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, துணைத் தலைவர் ஜி.டி.ராஜசேகர், செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையுரையாற்றினார்.

இவ்விழாவில் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜண்ட் குழுமத் தலைவர் லெஜண்ட் சரவணன் திறந்துவைத்தார். யோகரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீகோகுலம் குழுமத் தலைவர் கோகுலம் கோபாலன் திறந்துவைத்தார். சிட்டி யூனியன் வங்கி அரங்கத்தை, சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் என்.காமகோடி திறந்துவைத்தார். பத்திரிகையாளர் அரங்கத்தை ஹட்சன் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி.சந்திரமோகன் திறந்துவைத்தார். கட்டிடத்தின் கல்வெட்டை பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் திறந்துவைத்தார்.

விழா மலரை தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட, தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நலிந்த வணிகர்களின் குழந்தைகள் 9 பேருக்கு லெஜண்ட் சரவணன் நலதிட்ட உதவிகளை வழங்கினார். வசந்த் அண்டு கோ நிர்வாக இயக்குநர் விஜய் வசந்த் பங்கேற்று, நலிவடைந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசியதாவது: நாள் முழுவதும் உழைக்கும் வணிகர்கள் தங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த மக்கள் மருந்தகங்களில் 90 சதவீதம் மலிவாக மருந்துகள் கிடைப்பதால், தொற்றா நோய்களால் அவதிப்பட்டு வருவோரின் மாத மருந்து செலவு வெகுவாக குறைந்துள்ளது. அதுபோல சாமானியர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மலிவு விலையில் குறைந்த அளவில் மளிகை பொருட்களை தொகுப்பாக விற்க, மக்கள் மளிகை கடைகளை வணிகர்கள் திறக்க வேண்டும். கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். வணிகர்களின் வாழ்வியல், மக்களின் வாழ்வியலோடு இணைந்தது. எளிய மக்களுக்கு வணிகர்கள் உதவும்போது, அவர்கள் மேலும் உயர்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக பேரமைப்பின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆச்சி குழுமத் தலைவர் பத்மசிங் ஐசக், மெடிமிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஏ.வி.அனூப், சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நிர்வாக இயக்குநர் ஒய்.சிவஅருள் துரை,தொழிலதிபர்கள் எம்.இ.ஜமாலுதின், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜோன்ஸ், பேரமைப்பின் இளம் தொழில்முனைவோர் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.வி. கதிரவன், எம்.பி. கலாநிதி வீராசாமி, ஆளுநர் தமிழிசை கணவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x