Published : 18 Nov 2023 04:31 PM
Last Updated : 18 Nov 2023 04:31 PM

ரூ.2 முதல் ரூ.200 வரை... திருக்கார்த்திகைக்கு தயாராகும் சுடுமண் விளக்குகள் @ திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சுடுமண் விளக்குகள் தயாரிப்பின் முதற்கட்டமாக களிமண்ணில் விளக்குகளை வார்த்து எடுக்கும் பணியாளர்.

திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திண்டுக்கல் பகுதியில் சுடுமண் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுடுமண்ணால் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. சிறிய சுட்டி விளக்குகள் முதல் பெரிய குத்துவிளக்குகள் வரை மண்ணால் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு விளக்குகள் தயாரிக்கின்றனர். இதில் சிறிய சுட்டிவிளக்கு, தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, லட்சுமி விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு என பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்கின்றனர். பின்னர் இதை சூலையில் வைத்து சுட்டு எடுத்து அதற்கு வண்ணம் தீட்டுகின்றனர். பின்னர் விற்பனைக்கு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். வியாபாரிகளும் தயாரிக்கும் இடத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.

கருணாகரன்

இதுகுறித்து திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் சுடுமண் விளக்குகள் தயாரித்துவரும் கருணாகரன் கூறியதாவது: விளக்கு மட்டுமல்ல விநாயகர் சிலைகள், பூங்காக்களில் வைப்பதற்காக குதிரை, யானை போன்ற பொம்மைகள், கொலுவுக்கு தேவையான பொம்மைகள், வடமாநிலங்களில் பயன்படுத்தப்படும் குபேர பானைகள் என ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்றவாறு சுடுமண் பொருட்களை தயாரித்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அதிக அளவில் விநாயகர் சிலைகளை செய்தோம். அடுத்து நவராத்திரி கொலுவுக்காக பொம்மைகளை உற்பத்தி செய்தோம்.

சுடுமண் விளக்குகளுக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில்
ஈடுபட்டுள்ள கருணாகரன். படங்கள்: நா.தங்கரத்தினம்

தற்போது கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விளக்குகள் தயாரிக்கிறோம். இந்த ஆண்டு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. 2 ரூபாய்க்கு சிறிய விளக்கு முதல் ரூ.200-க்கு பெரிய குத்துவிளக்கு வரை விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தயாரித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான
சுடுமண் விளக்குகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x