Published : 17 Nov 2023 04:04 AM
Last Updated : 17 Nov 2023 04:04 AM

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் 48 நிறுவனங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் தொடங்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த தொழில் முதலீட்டாளர்களுடன் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மற்றும் ஆட்சியர் பழனி உள்ளிட்டோர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க , 48 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் பொன் முடி தெரிவித்தார்.

சென்னையில் தமிழக அரசு சார்பில், ஜனவரி 7 மற்றும் 8 -ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் முனைவோருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், “சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வழிவகை செய்யப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கிடும். இம்மாநாட்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், ரூ.1,020.39 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்க 48 நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இம்முதலீடுகளால் 3,902 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி முனையமான சென்னையை எளிதில் அணுகுவதற்கான சாலை இணைப்பைக் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான இட வசதியும் உள்ளது. வெண் மணியாத்தூர், பட்டணம் சிட்கோ தொழிற்பேட்டைகளுடன் சிப்காட் தொழில் வளாகமும் திட்டமிடப்பட்டுள்ளது. சிப் காட் சார்பாக திண்டிவனத்தில் உணவுத் தொழிற்பூங்கா, சிட்கோ சார்பில் மருந்துத் தொழிற்பேட்டையும் அமைக்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக் குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச் சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், சிறு மற்றும் குறு தொழில் சங்கத் தலைவர் அம்மன் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x